Tuesday, 25 April 2017

கவலைகளை விட்டொழியுங்கள்.

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
 வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு ,

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
 மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
***
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

 🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.    

Friday, 7 April 2017

வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது...🎭

✳பேசி தீருங்கள். பேசியே வளர்க்காதீர்கள்.

✳உரியவர்களிடம் சொல்லுங்கள். ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.

✳நடப்பதைப் பாருங்கள். நடந்ததைக் கிளறாதீர்கள்.

✳உறுதி காட்டுங்கள். பிடிவாதம் காட்டாதீர்கள்.

✳விவரங்கள் சொல்லுங்கள். வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.

✳தீர்வை விரும்புங்கள். தர்க்கம் விரும்பாதீர்கள்.

✳விவாதம் செய்யுங்கள். விவகாரம் செய்யாதீர்கள்.

✳விளக்கம் பெறுங்கள். விரோதம் பெறாதீர்கள்

✳சங்கடமாய் இருந்தாலும். சத்தியமே பேசுங்கள்.

✳செல்வாக்கு இருந்தாலும் சரியானதைச் செய்யுங்கள்.

✳எதிர் தரப்பும் பேசட்டும். என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.

✳நேரம் வீணாகாமல் விரைவாக முடியுங்கள்.

✳தானாய்த்தான் முடியுமென்றால், வேறு வேலை பாருங்கள்.
யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....


Thursday, 6 April 2017

சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்...

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...

இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில்,

சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.

*இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது*...

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...

*நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது*.

நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது.

எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை
மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு
ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது.

சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக

அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,

அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள்.

ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...

எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால்
சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

Wednesday, 5 April 2017

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது - இது நல்லதா ?

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம்.

ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.

எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும்போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அதுவரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்றுவிடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது.

அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன.

காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் .

அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிராவிட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பதுதான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப் பார்த்து, "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்.

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை.

வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும்  அவசியமே.
தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள்படத் தேவையில்லைதான்.

ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே...
அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.

அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத்தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும்போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.

ஆனால் ...
கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல.
வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.
அது சாத்தியமும் அல்ல.

கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.

கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிற்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.

நம்ம பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?!

நீந்த கற்று கொடுப்போம்... நீந்துவது அவர்கள் கடமை...

படித்ததில் சிந்திக்க வைத்தது

காயத்ரி மந்திரம் சொல்வதால் ஏற்படும் நன்மைகள்...


‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.    ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளது.

காயத்ரி மந்திரம்:

ஓம் பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்..!

இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும். வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.

இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. இதனை ஜெபித்தால் இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும்.

காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி-க்காகவும், நடுப்பகலில் சாவித்ரி-க்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதி-க்காகவும் ஜபிக்கப்படுகிறது.

காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது.