Sunday, 19 March 2017

போராடித்தான் பாப்போமே...

கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ  நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.

கடவுள் உடனே,
“ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

”மழையே பெய்” என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

போராடித்தான் பாப்போமே...