Thursday 6 December 2018

Minimalism - Fulfilment in real Life !

# "மினிமலிஸம் "... நிறைவைத் தரும் நிஜ வாழ்க்கை ! #

``எங்கப்பா என்னைவிட குறைவாதான் சம்பாதிச்சார்.
வீட்ல மூணு பசங்க, மூணு பேரையும் நல்லாப் படிக்க வச்சு, அவங்களுக்கு வேண்டியதையெல்லாம் பண்ணிட்டு,
கொஞ்சம் பணமும் சேமிச்சு சொந்தமா ஒரு வீட்டையும்
கட்டிட்டு, கடன் இல்லாம நிம்மதியா வாழ்ந்தார்.

ஆனா, நான் அவரைவிட அதிகமா சம்பாதிக்கிறேன்.
ஹவுஸிங் லோன், கார் லோன், கிரெடிட் கார்ட்னு ஏகப்பட்ட கமிட்மென்ட்ஸ், வேலை டென்ஷன், ப்ரஷர்னு என்னால அவரைப்போல நிறைவா ஒரு வாழ்க்கையை வாழமுடியல...’’

இப்படிப் புலம்புகிற இந்தத் தலைமுறை இளைஞர்களை இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிகிறது.
இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு சம்பாதித்தாலும்,
ஐபோன், பி.எம்.டபிள்யூ கார், லக்ஸரி அபார்ட்மென்ட்
என எது இருந்தாலும் உண்மையான மகிழ்ச்சி இல்லை
என்கிற குறை இருந்துகொண்டே இருக்கிறது.
அதைப் போக்கிக்கொள்ள மாரத்தான் ஓடுகிறார்கள்;
பார்ட்டிகளில் ஆடுகிறார்கள்; நிறைய செலவழித்து இன்டர்நேஷனல் டூர்கூட போகிறார்கள்...
மகிழ்ச்சி எங்கிருக்கிறது என்பது மட்டும் புரிபடவேயில்லை.

இப்படிப்பட்ட இளைஞர்களில் இருவர் தான்
ஜோஷூவா பீல்ட்ஸும், ரியான் நிகோடெமெஸும்.
2009-ல் இருவருமே நிறைய சம்பாதிக்கிற ஹைக்ளாஸ்
ஐ.டி பசங்க! தங்களுடைய 30-வது வயதில் ஆறு இலக்க சம்பளம், காஸ்ட்லி கார்கள், சகலவசதி வீடுகள், பார்ட்டி, கொண்டாட்டம்
என வாழ்வில் எல்லாமே ஓகேதான்.

ஆனால், ஏதோ குறைவதை உணர்கிறார்கள்.
வெற்றிடம் இருந்துகொண்டே இருக்கிறது.
வாரத்தில் 80 மணி நேரம் உழைப்பதும், உழைத்த பணத்தில்
எதை எதையோ வாங்கி வாங்கிக் குவிப்பதும் மகிழ்ச்சியில்லை என்பதை உணர்கிறார்கள். மகிழ்ச்சி என்பது நுகர்வு கலாசாரத்தில் இல்லை என்பதை புரிந்துகொண்ட நொடியில்
`மினிமலிசம்’ என்கிற கான்செப்ட் பிறக்கிறது.

இன்று நம்மைச் சுற்றி நுகர்வுக் கலாசாரம் பெருகி விட்டது. பொருள்களை வாங்குவதுதான் மகிழ்ச்சி, அதுவே சாதனை
என்கிற கருத்து பரவி வருகிறது.  உண்மையில், பொருள்களை வாங்குவதில் மகிழ்ச்சியில்லை; அதை எந்த அளவுக்குப் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது என்பதையே மறந்து கொண்டிருக்கிறோம்.

இந்த மனநிலைகளுக்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் ஜோஷூவாவும், ரியானும். 2009 தொடங்கி மினிமலிஸ வாழ்வை வாழும் இவர்கள், இன்று உலகெங்கும் இருக்கிற பல்வேறு பல்கலைக் கழகங்களில் மினிமலிஸ வாழ்வுமுறை பற்றி பாடமெடுக்கிறார்கள். லட்சக்கணக்கானோர் இவர்களுடைய மினிமலிஸ வாழ்க்கை முறையை நோக்கி நகர ஆரம்பித்திருக்கிறார்கள்.
நூல்கள், ஆவணப்படம், வலைப்பதிவுகள் என மினிமலிஸத்தைப் பரப்பிக் கொண்டிருக்கிறது இந்த இருவர் கூட்டணி.

மினிமலிஸம் என்றாலே கஞ்சப்பிசனாரி யாக வாழ்வது என்று எல்லோருமே நினைத்து விடுகிறார்கள். எல்லாவற்றையும் விலக்கி விட்டு, துறவியைப்போல வாழ்வது என்றும் ஒரு கருத்து உண்டு. அப்படியெல்லாம் எதையும் துறக்கத் தேவையில்லை.

மினிமலிஸம் என்பது அவசியமானவற்றுடன் அளவாக வாழ்வது. உடலில் தேவையில்லாத கொழுப்பு சேர்ந்தால், நோய்கள் எப்படி வருமோ அதுபோலவேதான் வாழ்க்கையில் தேவையில்லாத பொருள்கள் சேர்வதும். இடநெருக்கடியில் தொடங்கி பணநெருக்கடி வரை அனைத்திற்கும் காரணமாக இருப்பது
இந்த ‘அவசியமில்லா நுகர்வு’தான்.

அதென்ன அவசியமில்லா நுகர்வு?

நடந்துபோகிற தூரத்திற்கு காரில் செல்வது,
எல்லோரும் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே
அதிக விலைகொடுத்து செல்போன் வாங்குவது,
இரண்டுபேர் வாழ கடனுக்காவது நான்காயிரம் சதுர அடியில் மிகப்பெரிய வீட்டை வாங்கிக்கொள்வது,
அதில் அலங்காரத்திற்கென லட்ச லட்சமாய் செலவழித்துப் பொருள்களை அடுக்குவது என அவசியமில்லாமல் வாங்கிக் குவிக்கிற பயன்படுத்து கிற எல்லாமே தேவையில்லா நுகர்வுதான்.

``மினிமலிஸ்டுகள் குறைவு, குறைவு, குறைவு என வாழ்பவர்கள் இல்லை. அதிக நேரம், அதிக மகிழ்ச்சி, அதிக சேமிப்பு,
அதிக படைப்பாற்றல் என தங்களுடைய வாழ்வில் அவசியமானதை அதிகப்படுத்திக்கொள்கிற வாழ்வையே வாழ்கிறார்கள்’’ என்பது ஜோஷூவாவின் கருத்து.

மினிமலிஸம் என்கிற பெயரெல்லாம் இல்லாத காலத்திலேயே நம்முடைய பெற்றோர்களும் முன்னோர்களும் அப்படித்தான் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். வீட்டில் தேவையில்லாமல்
ஒரு பல்ப் எரிந்தால்கூட ஓடிச்சென்று அணைக்கிற பெரியவர்களை இப்போதும் நம் வீடுகளில் காண முடியும். அதுதான் நம்ம வீட்டு மினிமலிஸம். இதுபோன்ற சின்னச் சின்ன சேமிப்புகளின்
வழிதான் அவர்கள் தங்களுடைய நிம்மதியான வாழ்வாகக் கட்டமைத்தார்கள்.

உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் என அறியப்படுகிற பலரும்கூட மினிமலிஸ்டுகள்தான். வாரன் பஃபெட் நல்ல உதாரணம். கோடிகளைக் குவிப்பதற்கு முன்பு எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தாரோ, அப்படியேதான் இன்றுவரை இருக்கிறார். 1958-ல் நெப்ராஸ்காவில் வாங்கிய அதே சிறிய வீட்டில்தான் இன்னமும் வசிக்கிறார். ‘`தினமும் எதைச் செய்தால் மகிழ்ச்சியாக இருக்குமோ, அதையே செய்யுங்கள், அதுதான் உலகில் மிகப்பெரிய ஆடம்பரம்’’ என்கிறார் பஃபெட்.  அவர் மட்டுமல்ல, ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சக்கர்பெர்க் என மினிமலிஸ வாழ்வை வாழ்ந்த, வாழ்ந்துகொண்டிருக்கிற எண்ணற்ற மில்லியனர்களை நாம் காணமுடியும்.

மினிமலிஸ்ட் வாழ்க்கை வாழ்வதற்கான வழிகள் என்ன?

ஜோஷுவாவே 5 விஷயங்களை எழுதியிருக்கிறார்.

1 - பட்ஜெட் போட்டு வாழப் பழகுதல் :-
- மினிமலிஸ வாழ்க்கையில் முக்கியமானது இதுதான்.
நம்முடைய வரவுக்கு மேல் ஒரு பைசாக்கூட செலவழிக்கக் கூடாது. அதற்கு ஒரே வழி திட்டமிடல். செலவழிக்கிற
ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.

2 -  குறைவான பொருள்களில் வாழ்வது :-
- வீட்டு பீரோவில் 30 சட்டைகள் அடுக்கி வைத்திருப் போம். ஆன்லைனில் புதிய ஆஃபர் ஒன்றைப் பார்த்ததும் இன்னொரு சட்டை வாங்க ஆசை வரும்... அப்படி இல்லாமல் நம்மிடம் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன, அதை எவ்வளவு அதிகமாகப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பட்டியலிட்டு வைத்துக்கொள்வது, அவசிய மில்லாமல் இருக்கிற பொருள்களையே மீண்டும் மீண்டும் வாங்குவதைத் தடுக்கும்.

3 - வருங்காலத்திற்குத் திட்டமிடல் :-
- மெடிக்கல் இன்ஷூரன்ஸ் மாதிரி விஷயங்கள் மிகமிக முக்கியம். அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்டை மாதந்தோறும் கட்டாயம் பொறுமையாக வாசித்து எது தேவை தேவையில்லை என்பதை முடிவு செய்து அடுத்தடுத்த மாதங்களில் கட்டுப்படுத்துதல். வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை வெவ்வேறு முதலீட்டுத் திட்டங்களில் போட்டுவைப்பது.

4 - ஒவ்வொரு பர்ச்சேஸையும் கேள்வி கேட்பது :-
- எதை வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்குவதற்குமுன்
இது எனக்கு அவசியம்தானா... இது இல்லாமல் வாழ முடியுமா... முடியும் என்றால் எத்தனை நாளைக்கு என்பதைக் கணக்கிட்டு அதற்கு பிறகும் அந்தப் பொருளை வாங்குகிற உந்துதல்
இருந்தால் மட்டும் வாங்குவது.

5 - அடுத்தவர்களுக்கு வழங்குவது :-
- உலகில் மிகப் பெரிய மகிழ்ச்சி அடுத்தவர் களுக்கு உதவுவதுதான் என்பது வாரன் பஃபெட் தொடங்கி பில்கேட்ஸ் வரைக்கும் அத்தனை பேருமே பின்பற்றுகிற சீக்ரெட் ஃபார்முலா.
மாதந்தோறும் முடிந்த அளவு தொகையைப் பிறருக்கு கொடுங்கள் அதுவே உங்களைத் திருப்தியாக வாழவைக்கும்.

இந்த ஐந்து கட்டளைகள் நம்முடைய செலவுகளைக் குறைப்பதுடன், சேமிப்பையும் அதிகப்படுத்தும்.
கூடவே குறைந்த செலவில் திருப்தியான வாழ்வை
வாழவும் உதவும்.

இப்படித்தான் நம் பெற்றோர்கள் வாழ்ந்தார்கள்.
அதனால்தான் அவர்களால் சிறிய வருமானத்திலும்
சிறப்பாக வாழமுடிந்தது.

Thursday 29 November 2018

நல்ல குடும்பம் பற்றி : *-அருட்தந்தை பேசுகிறார்-*

நல்ல குடும்பம் பற்றி :
*-அருட்தந்தை பேசுகிறார்-* மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால்,
அதற்கு என்ன வழி?

மூன்று பண்புகள்:

1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? *கணவனா? மனைவியா?*
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு
மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

*“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, யார் அறிவாளியோ அவர்கள் தான்* விட்டுக் கொடுப்பார்கள். *அவர்கள்தான்* அனுசரித்துப் போவார்கள். *அவர்கள்தான்* பொறுத்துப் போவாகள்.”

அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்,
அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்.
அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள் அவர்களே!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை
ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

*விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.*

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே
உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற
*கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை* கவனத்தில் கொள்வோம்.

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் *அறிவாகத்தான்* இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உங்கள் *உணர்ச்சிகள்* நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம்.
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது
ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்குக்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு நிலைக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தாலும் குடும்பத்தில் அமைதி போய்விடும்.

7.  குடும்ப அமைதி நிலவ, *சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம்* என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் *பொறுத்தலும், மறத்தலும்* அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. ஏனென்றால் *அவரவர் அடிமனமே* தனக்கான துணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகும்.

10.  நல்ல குடும்பத்தில் *நன்மக்கள்* தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!

*--தத்துவஞானி வேதாத்திரி மகரிசி--*

Tuesday 20 November 2018

இப்பிறவியை நன்றியுடன் நினைக்க, நிறைய விஷயங்கள் உள்ளது!

நிச்சியம் இப்படியொரு அனுபவத்தை நீங்கள் சந்தித்திருக்கப் போவதில்லை. தவறாமல் படியுங்கள். நெகிழவில்லை என்றால், என்னைத் திட்டி கமெண்ட் போடலாம்.

சிங்கப்பூரில்,… ஒரு வாரக்கடைசி மாலை நேரத்தில்,...
-------------------------------
எங்களுக்கு சப்ளை செய்யும் பன்னாட்டு நிறுவனம் ஒன்று, பார்வையற்றவர்களுக்கு தொண்டு செய்யும் ஒரு நிறுவனத்துக்கு நிதி திரட்ட, ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு வெள்ளிக்கிழமை நடக்க இருந்த அந்நிகழ்ச்சிக்கு, எனக்கும் அழைப்பு வந்திருந்தது.
அழைப்பை ஏற்று, ஆன்லைனில் என் வருகையை உறுதி செய்தேன். கொஞ்சம் பொழுது போகும். கொஞ்சம் புது மனிதர்களையும் பார்க்கலாம்.!

பல்வேறு துறைகளிலிருந்து, சுமார் 40 பேர் வந்திருந்தார்கள். சில இந்தியர்களும் கூட!

நிகழ்ச்சியில்,... முதலில், சிங்கப்பூரில், பார்வையற்றவர்களின் வாழ்க்கை பற்றிய ஒரு வீடியோ காண்பித்தார்கள். ஒவ்வொருவரும் அடுத்தவருக்கு எப்படி உதவி, அவர்கள் வாழ்க்கையை நிறைவானதாக ஆக்க முயல்கிறார்கள் என்பது பற்றி! அது ஒரு ஊக்கமும், எழுச்சியும் ஊட்டும்15 நிமிட, கண்திறப்புக் குறும்படம். அதில், பார்வை சரியாக உள்ள சாதாரணமானவர்களும், இந்த பார்வை அற்றவர்களுக்கு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல், எப்படியெல்லாம் தங்களால் ஆனதை செய்து, அவர்கள் வாழ்க்கையை இயல்பானதாக ஆக்க உதவுகிறார்கள் என்று, அழகாய் விவரித்திருந்தார்கள். பார்வையற்றவருக்கு உதவுவதில் கிடைக்கும் நிறைவையும், திருப்தியையும், வெளிச்சமிட்டுக் காட்டினார்கள்!

அந்த வீடியோ முடிந்தவுடன், ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நிகழ்ச்சியின் அடுத்த பகுதி பற்றி விளக்கினார்கள்.

அந்தப் பகுதியின் தீம் : "முழு இருட்டில் உணவு உண்பது!"
இந்தப் பதிவு,... இதைப் பற்றியதுதான்.

நாங்கள் 40 பேரும், எங்கள் விரல்களைக்கூட எங்கள் கண்ணால் பார்க்க முடியாத அளவு, கும்மிருட்டான அறையில், எங்கள் இரவு உணவு உண்ணப்போகிறோம்! அடுத்து, வரிசையாக என்னென்ன நடக்கப் போகிறது என்பதை, தெளிவாக விளக்கினார்கள்!

அடுத்த இரண்டு மணி நேரத்துக்கு, அந்த இருட்டு அறையில் எங்கள் நாற்பது பேருக்கும், முறையாக உணவு பரிமாறி, எங்களை விருந்துபசாரம் செய்யப்போவது,...

மூன்று, பார்வையற்றவர்கள் குழு!

ஒரு பார்வையற்ற பெண், இந்த வாலண்டீயர் குழுவின் தலைவி. அவருக்கு உதவியாக இரண்டு பார்வையற்ற ஆண்கள்.!

அந்த தலைவி, எங்களுக்கு இருட்டில் உணவு உண்பது எப்படி, என்பது பற்றி சிறு குறிப்புக்கள் தந்தார். (பார்வையற்றவர்கள் உலகத்தில் வழக்கமாக பின்பற்றப்படும் "விதி"கள் அவை!).

1) உங்கள் சாப்பாட்டு மேஜையில் பின்வரும் வகையில் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்:

நடுவில் நேரெதிரில் இருக்கும் சாப்பாட்டு தட்டுக்கு,...
(கடிகாரத்தின் சிறிய முள்)
-- 3-மணி (காட்டும்) திசையில்,.. ஒரு ஸ்பூன்!
-- 9-மணி திசையில், ஒரு முள்கரண்டி!
-- 12-மணி திசையில், இன்னொரு ஸ்பூன்!
-- 2-மணி திசையில், காலி கண்ணாடி டம்ளர்!
-- 6-மணி திசையில், மடித்த பேப்பர் டவல்!

2) இரண்டு பெரிய ஜக் (கூஜா) கள், எல்லா மேஜைகளுக்கும், சுற்றில் வரும். அவைகளில், பாத்திர வெளிப்பரப்பு டிசைன் எதுவும் இல்லாமல் வழுவழுவென்றிருப்பதில் குடிநீரும்,.. பாத்திர வெளிப்பரப்பு நெளிநெளியாய் இருப்பதில், ஆரஞ்சு ஜூஸும் இருக்கும்.!

3) அந்த கூஜாக்கள் உங்களிடம் வரும்பொழுது, உங்கள் கிளாஸ் டம்ளரில், நிறையும் அளவு தெரிய, உங்கள் ஆட்காட்டி விரலை உள்ளே நுழைத்து, நீரோ அல்லது ஜூஸோ, உங்கள் விரல்முனையை தொடும்வரை விட்டுக்கொள்ள வேண்டும்! (அளவாக டம்ளரில் விட, இதுதான் வழி!)

டீம் லீடர் பெண் கேட்டார்: "எல்லாருக்கும் புரிந்ததா?"
எல்லோரும் புரிந்தது என்று மரியாதைக்கு சொல்லிவிட்டு, குழப்பம் தீர, அவசரம் அவசரமாக, பக்கத்தில் இருந்தவரிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டிருந்தோம்!

அடுத்த ஒன்றரை மணி நேரம்,... அந்தக் கும்மிருட்டில்,
எங்களுக்கு கண்-திறப்பு நிகழ்ந்தது!
-------------------------------
நாங்கள் நாற்பது பேரும், சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் ஒரு பார்வையற்றவரால், அந்த கும்மிருட்டு ஹாலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஒவ்வொருவரும், (ஒரு குழுவுக்கு-ஒரு மேஜை) மேஜையை சுற்றி இருந்த ஒரு நாற்காலியில் அமர்த்தப்பட்டோம்!

அப்பொழுது,… எங்களுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்த விஷயம் இருட்டு அல்ல,... எங்கள் மனத்தில் தோன்றிய, "நாங்கள்தானே உங்களுக்கு இதுபோல் சாதாரணமாக உதவி செய்வோம்,... இப்போது,..!" என்ற எண்ணம் மட்டுமே!

எல்லோரும் அவரவர் மேஜையில்/இருக்கையில் அமர்ந்த பின்னர், அந்த பார்வையற்ற மூவர்-குழுவால், எங்களுக்கு five-course டின்னர் பரிமாறப்பட்டது - வெல்கம் ட்ரிங்க், அப்பிடைஸர், ஸ்டார்ட்டர்கள், மெயின் கோர்ஸ், மற்றும் டெஸெர்ட் கள் !!!!!

இந்த பார்வையற்ற மூவர்-குழுவின் பரிமாறலில், எங்களை மிகவும் பிரமிப்பூட்டிய விஷயம் என்ன தெரியுமா?

நாங்கள் ஆன்லைனில் ரெஜிஸ்டர் செய்யும் பொழுது, சைவமா அசைவமா என்று குறிப்பிடச்சொல்லி, கேட்கப்பட்டது! நான் இயற்கையாக சுத்த சைவம் என்பதால், அதை தேர்ந்தெடுத்திருந்தேன்!

எங்கள் நாற்பது பேரில் இருந்த ஒரு சில சைவ-உணவு உண்பவர்கள் தாறுமாறாக, வெவ்வேறு மேஜைகளில்/இருக்கைகளில் அமர்ந்திருந்தாலும்,... சற்றும் தவறாமல், மிகச் சரியாக, அவர்களுக்கு மட்டும், சுத்த சைவ உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்ததுதான்!

அதைவிட பிரமிப்பு,... எங்கள் தட்டு காலியாக ஆக,... சரியாக ஒருவர் வந்து, அடுத்து என்ன உணவு வேண்டும் என்பதைக் கேட்டு, தட்டில் தேவையான அளவு நிரப்பிவிட்டுச் சென்றார்! நாங்கள் கொஞ்சம் கூட அடுத்த வாய் உணவுக்காக, காத்திருக்க வேண்டிய அவசியமே வரவில்லை!

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் கழித்து,.. எங்களுக்கு முழு திருப்தியுடன், வயிறு நிரம்ப உண்டுவிட்டோமா என்று, பரிமாறல்-குழுவின் தலைவி கேட்டு, அதை, உறுதி செய்துகொண்டவுடன்,...

அறையின், விளக்குகளை ஆன் செய்தார்!

நாற்பதில், ஒருவர் தவறாமல்,
கண்ணில் நீருடன், அந்த அறையை விட்டு வெளியே வந்தோம்!

வயிறு நிறைந்தது.! கண் திறந்தது!
-------------------------
இருவிழிகளில் பார்வையைப் பெற்று, இந்த அழகான உலகைக் காணும் பாக்கியம் பெற்ற நாம், எவ்வளவு அதிருஷ்டம் செய்தவர்கள்,...

என்பதை உணர்ந்தோம்!

அதைவிட முக்கியமாக,... பார்வை இல்லாமல் வாழ்வோரின் வாழ்க்கை, எவ்வளவு சிரமமானது எனும் கண்திறப்பு, எங்கள் மரபணுவில் பதிந்தது! வெறும் இரண்டு மணி நேரம் இருட்டில் இருக்கவே இவ்வளவு சிரமம் என்றால், வாழ்நாள் முழுவதும், அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய கஷ்டங்கள், சிக்கல்கள், எவ்வளவு இருக்கும், என்று சுலபமாக உணர முடிந்தது!

எங்களுக்கு இயற்கையாக அமையப் பெற்ற பல அதிர்ஷ்டமான விஷயங்களின் அருமையை உணராமல், இன்னமும் இது வேண்டும், அது வேண்டும், என்று அற்ப விஷயங்களுக்காக தேடி, ஓடி, நொந்து, அழுது, விரக்தியுடன் வாழும் வாழ்வின் விசித்திரத்தை,... புரிந்து கொண்டோம்!

உள்ளவைகளுக்கு நன்றியுடன் இல்லாமல்,
இல்லாதவைகளுக்கு குறை சொல்லும்
நன்றி கெட்டத்தனத்தை வெட்கத்துடன் மனதில் பதித்தோம்!!

புது மனிதராக, வாழ்வின் புதுப்பாதையின் ஆரம்பத்தில்,
எங்களைக் கொண்டு நிறுத்தி விட்டுச் சென்றனர், அந்த மூவர்!
-------------------------------
சந்தோஷமாக வாழுங்கள்!
சந்தோஷப்பட உங்கள் வாழ்வில் நிறைய இருக்கிறது!

நன்றியுடன் இருங்கள்!
இப்பிறவியை நன்றியுடன் நினைக்க,
நிறைய விஷயங்கள் உள்ளது!

Monday 19 November 2018

எது கெடும் ?

01) பாராத பயிரும் கெடும்.
02) பாசத்தினால் பிள்ளை கெடும்.
03) கேளாத கடனும் கெடும்.
04) கேட்கும்போது உறவு கெடும்.
05) தேடாத செல்வம் கெடும்.
06) தெகிட்டினால் விருந்து கெடும்.
07) ஓதாத கல்வி கெடும்.
08) ஒழுக்கமில்லாத வாழ்வு கெடும்.
09) சேராத உறவும் கெடும்.
10) சிற்றின்பன் பெயரும் கெடும்.
11) நாடாத நட்பும் கெடும்.
12) நயமில்லா சொல்லும் கெடும்.
13) கண்டிக்காத பிள்ளை கெடும்.
14) கடன்பட்டால் வாழ்வு கெடும்.
15) பிரிவால் இன்பம் கெடும்.
16) பணத்தால் அமைதி கெடும்.
17) சினமிகுந்தால் அறமும் கெடும்.
18) சிந்திக்காத செயலும் கெடும்.
19) சோம்பினால் வளர்ச்சி கெடும்.
20) சுயமில்லா வேலை கெடும்.
21) மோகித்தால் முறைமை கெடும்.
22) முறையற்ற உறவும் கெடும்.
23) அச்சத்தால் வீரம் கெடும்.
24) அறியாமையால் முடிவு கெடும்.
25) உழுவாத நிலமும் கெடும்.
26)உழைக்காத உடலும்  கெடும்.
27) இறைக்காத கிணறும் கெடும்.
28) இயற்கையழிக்கும் நாடும் கெடும்.
29) இல்லாலில்லா வம்சம் கெடும்.
30) இரக்கமில்லா மனிதம் கெடும்.
31) தோகையினால் துறவு கெடும்.
32) துணையில்லா வாழ்வு கெடும்.
33) ஓய்வில்லா முதுமை கெடும்.
34) ஒழுக்கமில்லா பெண்டிர் கெடும்.
35) அளவில்லா ஆசை கெடும்.
36) அச்சப்படும் கோழை கெடும்.
37) இலக்கில்லா பயணம் கெடும்.
38) இச்சையினால் உள்ளம் கெடும்.
39) உண்மையில்லா காதல் கெடும்.
40) உணர்வில்லாத இனமும் கெடும்.
41) செல்வம்போனால் சிறப்பு கெடும்.
42) சொல்பிறழ்ந்தால் பெயரும் கெடும்.
43) தூண்டாத திரியும் கெடும்.
44) தூற்றிப்பேசும் உரையும் கெடும்.
45) காய்க்காத மரமும் கெடும்.
46) காடழிந்தால் மழையும் கெடும்.
47) குறிபிறழ்ந்தால் வேட்டை கெடும்.
48) குற்றம்பார்த்தால் சுற்றம் கெடும்.
49) வசிக்காத வீடும் கெடும்.
50) வறுமைவந்தால் எல்லாம் கெடும்.
51) குளிக்காத மேனி கெடும்.
52) குளிர்ந்துபோனால் உணவு கெடும்.
53) பொய்யான அழகும் கெடும்.
54) பொய்யுரைத்தால் புகழும் கெடும்.
55) துடிப்பில்லா இளமை கெடும்.
56) துவண்டிட்டால் வெற்றி கெடும்.
57) தூங்காத இரவு கெடும்.
58) தூங்கினால் பகலும் கெடும்.
59) கவனமில்லா செயலும் கெடும்.
60) கருத்தில்லா எழுத்தும் கெடும்.