Saturday, 1 February 2020

உறவுகள் தொடர்கதை!!!

‘‘உறவுகளை நான் பெருசா நினைக்கிறதில்ல, மதிக்கிறதில்ல. பெரிய என் உறவு வட்டத்தைவிட்டு கொஞ்சம் கொஞ்சமா விலகிட்டே வந்தேன். அதை `மாடர்ன் லைஃப் ஸ்டைல்'னு நான் நினைச்சேன்.

 சமீபத்தில், என் தோழி ஒருத்தியோட வீட்டு கிரகப்பிரவேச விழாவுக்குப் போயிருந்தேன். அவளோட மூன்று தலைமுறை உறவுகளோடும் அவ அரவணைப்பிலேயே இருந்ததோட, விழாவுக்கு அத்தனை பேரையும் வரவழைச்சிருந்தா. அவங்களோட சந்தோஷம், நல விசாரிப்புகள், கேலி, கிண்டல், உரிமை, கடமைனு விழாவே அமர்க்களப்பட்டுப்போனது.

‘உங்க தாத்தாவும் நானும் பெரியப்பா மகன் - சித்தப்பா மகன்’னு தாத்தா ஒருவர் பேரனுக்கு உறவு முறையை விளக்கிக்கொண்டிருக்க, ‘வாட்ஸ்அப்ல இருக்கியா? இனி லெட்ஸ் ஸ்டே இன் டச்!’னு ஒருவருக்கொருவர் அலைபேசி எண்கள் பரிமாறிட்டு இருந்தாங்க இந்தத் தலைமுறை இளைஞர்களும், இளம் பெண்களும்!

‘நீ மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் முடிச்சிருக்கேனு ஏன்ப்பா எங்கிட்ட சொல்லல? நான் ஆட்டோ மொபைல் கம்பெனி ஹெச்.ஆர்ல இருக்கேன். உன் ரெஸ்யூம் ஃபார்வேர்டு பண்ணு!’னு தன் தூரத்து தங்கையோட மகனுக்கு வேலையை உறுதிசெய்துட்டு இருந்தார் ஒருத்தர்.

‘நாம தாயில்லாப் பொண்ணாச்சேனு எல்லாம் கவலைப்படாதே. உன் டெலிவரி அப்போ சித்தி நான்  ஹெல்ப்புக்கு வர்றேன். பெயின் வந்ததும் எனக்கும் ஒரு போன் பண்ணிடு!’னு வளைகாப்பு முடிந்திருந்த ஒரு இளம் பெண்ணோட கைபிடித்துச் சொல்லிட்டிருந்தார் ஒரு பெண்மணி.

இப்படி எல்லா வகையிலும் ஒருத்தருக்கு ஒருத்தர் பலமா இருக்கக்கூடிய உறவுச் சங்கிலியை நான் தொலைத்ததை உணர வெச்சது அந்த விழா.

இப்போ என் சொந்தங்களோட கான்டாக்ட் நம்பர் எல்லாம் சேகரிக்க ஆரம்பிச்சிருக்கேன்’’
 - நீண்ட கடிதம் அனுப்பியிருந்தார் சென்னை வாசகி ஒருவர்.

இந்த அவசர உலகத்தில், பரபரப்பான வேலைச் சூழலில் சொந்தங்களை எல்லாம் அரவணைத்துச் செல்ல பலருக்கும் நேரமிருப்பதில்லை என்பதை, உறவுகளைத் தொலைப்பதற்கான காரணமாக ஏற்க முடியாது.

திருமண அழைப்பிதழ் தந்த உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்குச் செல்ல முடியவில்லை, வெளியூர் பயணம், அலுவலக மீட்டிங், பிள்ளைகளின் டேர்ம் எக்ஸாம் என்று பல காரணங்கள்.

சரி,,,

ஆனால், திருமணம் முடிந்த பின்னும்கூட ஒரு வார இறுதி நாளில் அவர்கள் வீட்டுக்குச் சென்று, திருமணத்துக்கு வர இயலாத நிலையைச் சொல்லி, உறவைப் பலப்படுத்தும் வாய்ப்பை ஏன் பலரும் முன்னெடுப்பதில்லை?

அட்லீஸ்ட், ‘கல்யாணம் நல்லபடியா முடிஞ்சதா?! ஸாரி, வர முடியலை. நிச்சயம் அடுத்த முறை ஊருக்கு வரும்போது வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்!’ என்ற தொலைபேசி விசாரிப்பைக்கூட செய்வதில்லை.

 ‘அதுக்கெல்லாம் நேரமில்ல’, ‘மெட்ரோ லைஃப்ல நாங்களே பரபரனு ஓடிட்டிருக்கோம்’, ‘வேலை டென்ஷன்ல கல்யாணம் மறந்தே போச்சு’ - இவையெல்லாம் சப்பைக் காரணங்கள்.

உண்மையான காரணம், அந்த உறவைப் பேணுவதில் ஆழ்மனதில் பிடிப்பு இல்லை. ‘அப்பாவோட தாய்மாமன் பையன். இனி, இந்த சொந்தத்தை எல்லாம் கன்டின்யூ பண்ண முடியுமா? கன்டின்யூ பண்ணணுமா என்ன?’ என்று கேட்கலாம் பலர்.

இங்கு ஒரு பெரிய உண்மையைச் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில், முன் பின் தெரியாத, முகம் தெரியாத நபர்களுடன் எல்லாம் நாள் தவறாத தொடர்பில் இருப்பதும், நெதர்லாந்தில் இருக்கும் ஒரு நண்பன்/தோழிக்கு பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவதும்,

வெளிமாநிலத்தில் இருக்கும் ஒரு தமிழனுக்கு உதவி என்றதும், ‘நம்மாளு’ என்று ரத்தம் துடிக்க இணையப் புரட்சியில் இறங்குவதும், ‘ஃப்ரெண்ட் ஆஃப் ஃப்ரெண்ட்’ என்று அறிமுகமான ஒருவருடன் உயிர் நட்பு வளர்ப்பதும் என, யார் யாருடனோ இணைய முடிகிறது இந்தத் தலைமுறைக்கு. ஆனால், உறவுகளைத் தொடர முடியவில்லை என்பது எவ்வளவு முரண்?!

வேர்களை அறுத்துக்கொண்டு, கிளைகள் பரப்ப துடிக்கிற இம்மனநிலையை என்னவென்று சொல்வது?

சமூக வலைதளங்களின் வெற்றிக்கு அடிப்படை என்ன என்று தெரியுமா?! சொந்தங்கள் ஒன்றுகூடி பேசி மகிழும் வீட்டு விசேஷங்கள்தான். கல்யாணத்தில், காதுகுத்தில், சடங்கில், ஊர்த் திருவிழாவில் என அடிக்கடி உறவுகள் அனைத்தும் ஓரிடத்தில் கூடி, பேசி, சிரித்து, அழுது, கோபம்கொண்டு, விருந்து உண்டு, கலைந்து சென்ற நம் முந்தைய தலைமுறையினரின் சந்தோஷம் இந்தத் தலைமுறைக்குக் கிடைக்கவில்லை.

உறவினர் விசேஷங்களையும், ஊர்த் திருவிழாவையும் ‘மாடர்ன் வாழ்வில்’ தவிர்த்ததால் கூடி மகிழ, பேசிச் சிரிக்க வழியற்றுப் போன இந்தத் தலைமுறை, இணைய வீதியெங்கும் ஜனத்திரள் பார்க்க உற்சாகமாகிப் போனது.

யார் யாரிடமோ அறிமுகமாக, பேச, சிரிக்க, கோபம் கொள்ள, வம்பு வளர்க்க, வெளியேற என பொழுது போக்கித் திரிகிறது.

அதில் தன் சந்தோஷம் இருப்பதாக நம்புகிறது. எனவே, பிள்ளைகளை ஆபத்துகள் நிறைந்த இணைய வெளியில் இருந்து உறவு வட்டத்துக்கு மடை மாற்றுங்கள்.

அதற்கு, ‘உறவுகள் வேண்டும்’ என்ற உணர்வு முதலில் வர வேண்டும்.

‘எதுக்கு உறவு? பொறாமை, பகை, புறணி பேசுறதுன்னு, ரொம்ப வெறுத்துட்டேன்!’ என்ற அனுபவம் சிலருக்கு இருக்கலாம்.

உறவுகள் அனைத்துமே அப்படி அல்ல. அது தனி மனித குணத்தின் வெளிப்பாடு. நல்லது, தீயது எங்கும், எதிலும் உண்டு என்பது போல, உறவுகளிலும் நல்லவர்கள், தீயவர்கள், குணம் கெட்டவர்கள் இருப்பார்கள்தானே? அதற்காக ஒட்டுமொத்த உறவுகளும் வேண்டாம் என்று விலக்கத் தேவையில்லை.

‘உங்கப்பாதான் தகப்பன் ஸ்தானத்துல இருந்து என் கல்யாண வேலைகள் எல்லாம் செஞ்சாரு. நீ எங்கே இருக்க, எத்தனை பிள்ளைங்க?’ என்று கண்கள் மல்க விசாரித்து, ‘எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்!’ என்று உளமாற வாழ்த்தும் ஓர் அத்தையின் ஆசீர்வாதம், உலகின் மிகத் தூய்மையான அன்பு.

‘நல்லது கெட்டதுனா கூப்பிடுடா, ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்!’ என்று உரிமையும், கடமையுமாகப் பேசும் சித்தப்பாவின் பிரியத்தை, சித்தியின் சிடுசிடுப்பை சகித்துக்கொண்டாவது சுவீகரிக்கத்தான் வேண்டும்.

உங்களுக்கு ஒரு பிரச்னை எனில், உங்களுக்கு முன்பாகவே, ‘எங்க அண்ணனை பேசினது யாருடா..?’ என்று கோபம் கக்கிச் செல்லும் தம்பியுடையோனாக இருப்பதன் பலத்துக்கு இணை இல்லை.

வீடு, பேங்க் பேலன்ஸ், போர்டிகோவில் பெரிய கார், ஆடம்பர வாழ்க்கை என எல்லாம் இருந்தும், உறவுகள் இல்லை எனில், ஒருநாள் இல்லையென்றால் ஒருநாள் அந்த பலவீனத்தை உணரத்தான் வேண்டும். ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

உறவுகளுக்கு எப்போதும் முற்றுப்புள்ளி வேண்டாம். அது ஓர் அழகிய தொடர்கதை!
உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

குழந்தைகளை உறவினர் விழா, விசேஷங்களுக்கு, ஊர்த் திருவிழா வுக்கு அழைத்துச் செல்லுங்கள். அங்கு உறவினர்கள் அனைவரையும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களுடனான உங்களின் பால்ய வயது நினைவுகளைப் யபிள்ளைகளுடன் பகிருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வில் முக்கியமானவர்கள் என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள்.

‘உங்க அத்தை இருக்காளே, பொறாமை பிடிச்சவ' என்று யநெகட்டிவாக எந்த உறவுகளையும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்காதீர்கள். அவர்களைப் பற்றி எதுவும் சொல்லாமலே விட்டுவிடலாம்.

‘உங்க அப்பா வீட்டு சொந்தம் இருக்காங்களே' என்று உறவுகள் என்றாலே உளம் வெறுக்கும் அளவுக்கு குழந்தைகளிடம் எதையும் பேசாதீர்கள்.

உங்கள் வீட்டு இளம் பிள்ளைகளையும், உறவினர் வீட்டு இளம் பிள்ளைகளையும் பரஸ்பரம் அறிமுகப்படுத்தி, இணைய யுகத்தில் உறவைப் புதுப் பித்துக்கொள்ளவும், தொடர்ந்து செழிக்க வைக்கவும் வழி ஏற்படுத்திக் கொடுங்கள்.

மாமன் முறை என்றால் செய்ய வேண்டிய கடமைகள் என்ன, அத்தை முறை என்றால் செய்ய வேண்டிய சடங்குகள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். நாளை உங்கள் மகனும், மகளும் ஒருவருக்கொருவர் அந்த முறை செய்ய வேண்டியவர்களே என்பதையும் சேர்த்துச் சொல்லி குழந்தைகளை வளர்த்தெடுங்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் போதும் நமக்கு, ரிலேட்டிவ்ஸ் எல்லாம் வேணாம்’ என்று இன்று பல நகரத்துக் குடும்பங்களில் ஊறிக்கிடக்கும் மனநிலையை மாற்றுங்கள்; உறவுகள் பேணுங்கள்!!! உறவுகளைப் பரிசளியுங்கள்,,, அடுத்த சந்ததிக்கு!!!

பெண்ணின்றியும் அமையாது உலகம்!

'ஏங்க....இன்னொரு இட்லி வைச்சுக்கோங்க...'
கணவனிடம் கெஞ்சும் மகள்..
அதற்குள் அத்தையின் குரல்.
'இதோ வர்றேன் அத்தை..' பரபரவென ஓடும் மகளைக் கண்டு அதிசயிக்கின்றனர் பெற்றோர்.

பசி சற்றும் பொறுக்காத அந்த செல்லப் பெண், புகுந்த வீட்டில் காலை நேரத்து உணவை உண்ணவே இல்லை. அதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை.
ஆத்மாவின் குரல்:

ஆம்... அம்மா வீட்டின் செல்லக் குழந்தைகள் தான்,
புகுந்த வீட்டின் பம்பரங்கள். இறக்கைகள் மட்டுமே இல்லை இந்த தேவதைகளுக்கு.

வேரோடு பிடுங்கிய செடி வேறோர் இடத்தில் நடப்படும் போது அந்த சூழலையும் கிரகித்துக் கொள்கிறது. புதிய சூழலை அங்கீகரித்தும், சுவீகரித்தும் கொள்கிறார்கள். ஆனால் அங்கே அவளுக்கான அங்கீகாரங்கள் வழங்கப்படுவதே இல்லை பெரும்பாலும்.

மனைவி என்ற ஆத்மாவின் குரல் யாருக்கும் கேட்பதில்லை. பின் துாங்கி முன் எழும் பத்தினியாகவே பழக்கப்படுத்தி விட்டது சமுதாயம்.

'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே! காலமிதை தவற விட்டால் துாக்கமில்லை மகளே' என்ற கவிஞனின் கானம் காற்றில் மெல்லத் தேய்கிறது. தனக்கென எதையும் யோசிப்பதில்லை மனைவி என்ற பாத்திரம். அம்மா வீட்டில் கதாநாயகி வேடம் தான் எப்போதும்.

கணவன் வீட்டில் குண சித்திர வேடம். மனைவிக்கு என்ன செய்து விட்டோம். இது ஆண்கள் அனைவருக்குமான கேள்விகள்.

இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்கள், மனைவியை நேசிப்பவர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். உங்கள் மனைவியின் பிறந்த நாள் எப்போது? பிடித்த நிறம் எது?பிடித்த புத்தகத்தின் பெயர் என்ன? இப்படி கேள்விகளை கேட்டுக் கொண்டே போகலாம்.

ஆனால் இதற்கெல்லாம் பெரும் பாலும் விடை தெரியாது என்பது தான் உண்மை.

சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்க நான்கு குறிப்புகள் கொடுத்தால் கூட சொல்ல முடியாது என்பதே கூடுதல் சோகம்.

இந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிப்பது கடினமாய் இருந்தால் கேள்விகளைக் கேட்பவர்களாக இருங்கள். சாப்பிட்டியாமா? உடம்பு சரியில்லையா?ஏன் முகம் வாடியிருக்கு? உங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வரலாமா? இப்படிக் கேள்விகளைக் கேட்டுத்தான் பாருங்களேன்.

மனைவியின் மன வலிகள் எல்லாம் மறைந்து மட்டுமல்ல; மறந்து கூட போய் விடும். உடல் வலிகள்,மன வலிகளைத் தீர்க்கும் இடமாக புகுந்த வீடும் இருக்கட்டுமே.

நீக்கமற நிறைந்திருப்பவள்:

'என் மனைவி வீட்டுக்குச் செல்வதில்லை நான்...' பெருமித தொனியில் சொன்ன அந்த மனிதரின்,
உடல் நிலை சரியில்லாத அம்மாவைக் கவனித்துக் கொண்டு இருக்கிறார் அவர்மனைவி.

உங்கள் வீட்டில் ரிமோட் யாரிடம் இருக்கும்?இது 'டிவி' ஒளிபரப்பில் கேட்கப்பட்ட கேள்வி...
'அதுவா கணவர் கிட்ட இருக்கும். அவர் இல்லாதப்ப என் மகன் கிட்ட இருக்கும்..' வெள்ளந்தி தனமாய் பதில் வருகிறது அந்தப்பெண்ணிடம்.

உடல் சார்ந்த பார்வையை விடுத்து மனம் சார்ந்த பார்வையில் பெண்களை நோக்கும் போது மட்டுமே பெண் என்பவளின் பெருமை புரியும்.

ஒரே ஒரு நாள் ஊருக்குச் சென்று விட்ட மனைவி இல்லாத வீடு எப்படி இருக்கும் என சொல்லத் தேவையில்லை. வாழ்வில் நீக்கமற நிறைந்திருப்பவள் மனைவி.அதனால் தான் ஔவைப் பாட்டி

'தாயோடு அறுசுவை போம்தந்தையோடு கல்வி போம்சேயோடு தான் பெற்ற செல்வம் போம்மாய வாழ்வு உற்றாருடன் போம்உடன் பிறப்பால் தோள் வலி போம்பொற் தாலியோடு எவையும் போம்'என்று பாடியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணை போன பின்னால் சகலமும் போய் விடுவதாக குறிப்பிட்டு இருப்பார்.

சமீபத்திய சர்வே ஒன்று கூட இதைத் தான் கூறுகிறது.யாதுமாகி நிற்பவள்மனைவி இழப்பிற்குப் பின்னாலான கணவனின் வாழ்நாள் இருப்புகள் குறைந்து விடுகிறதாம். காரணம் என்ன தெரியுமா? எல்லாமுமாகிப் போனவள் ஏதுமற்று போய் விடுவதால் தான்.

'நாளும் பொழுதும் நலிந்தோர்க்கில்லை. ஞாயிற்றுக்கிழமையும் பெண்களுக்கில்லை' என்பது உண்மை தானே?

அதிகாலையில் இருந்து அரக்க பரக்க வேலை பார்த்து அல்லாடும் இல்லத்தரசிகள் பற்றி யாரேனும் கேட்டால் அவ வீட்டில் சும்மா தான் இருக்கா என்று வாய் கூசாமல் சொல்லமுடிகிறது பிறரிடம்.

உலகிலே அதிக சம்பளம் தரக்கூடிய பணி எது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அம்மாவின் பணி தான்.
அதற்கு ஈடு இணையே இல்லை என்பதான பதிலே மானுஷியை உலக அழகியாக ஆக்கியது.

மனைவியே தாயாக,மனைவியே தோழியாக,ஆண்களின் கோபங்களின் வடி காலாக என யாதுமாகி நிற்கிறாள்.

அம்மாவிடம் கூட கணவனை விட்டுத் தர முடியாது அவளால் ஒரு போதும்!
'குழம்பு நல்லா இல்லை...இத மனுசன் சாப்பிடுவானா' என்று எரிந்து விழும் கணவனைப் பற்றி கூறிய பக்கத்து வீட்டு பெண்மணியிடம்,

 'குழம்பு நல்லா இருக்கிறப்ப என்ன சொல்வார் உங்க கணவர்' என்ற என் கேள்விக்கு 'அது அவர் ஒண்ணும் சொல்லாம சாப்பிடறத வைச்சு கண்டு பிடிச்சுக்கலாம்' என்ற பதிலில் மவுனமானது மனது.

'அவர் சொன்னா சரியா இருக்கும்' என்ற நம்பிக்கை வார்த்தைகள், 'அவள் சொன்னா சரியாகத் தான் இருக்கும்' என்று அந்தப் பக்கமும் இடம் பெயர்வது எப்போது?

தன் துன்பத்திற்கான தீர்வைத் தரும் மனிதர்களாக கணவரை எதிர் பார்ப்பதில்லை. அப்படியாம்மா..என்று கேட்கும் கணவர்களாக இருந்தால் கூட போதும் என்பதே பெண்களின் எதிர்பார்ப்பு.

புதைந்த தனித்திறமை:

பள்ளிப் பருவத்தில் பாட்டுப் போட்டிகளில் பரிசு வாங்கிய பெண்கள், பேச்சு, ஓவியம் என சிறந்து விளங்கிய தோழிகள் திருமண வாழ்க்கைக்குப் பிறகு தன் தனித் திறன்களை தனக்குள்ளேயே புதைத்துக் கொள்கிறார்கள்.

இந்த சமூகம் கூட அப்படித் தான் பெண்ணை வடிவமைக்கிறது. கணவனுக்கு நன்றாக சமைத்துப் போடத் தெரிந்திருத்தலே மிகச்சிறந்த இல்லத்தரசி என்றே பழக்கப் படுத்தி விட்டது.

கல்லுாரி படிக்கும் போது பட்டி மன்றம் பேசும் அக்காவை,ஒரு முறை சந்திக்க நேர்ந்தது. அறிவாற்றலும், அழகும் நிறைந்த அவளிடம் இப்பவும் 'பேச போவீங்களாக்கா' என்றதற்கு

அவள் ரகசிய குரலில் 'அவருக்கு இதெல்லாம் பிடிக்காது..வீட்டில கூட மெதுவா தான் பேசுவேன்' என்றதும்.. மனம் கனத்துப் போனது.

இந்த தேவதைகளின் கனவுகளுக்கான முடிவு காலம் பிறந்த வீட்டிலேயே முடிந்து போனதா? விதி விலக்கான ஆண்களும் இருக்கிறார்கள் என்றாலும் விதிகளோடே வாழும் பெண்களும் இருக்கிறார்கள்தானே?

பண்டிகை காலங்களில் புதுத் துணி உடுத்தி, பண்டிகை கொண்டாடும் பெண்களை எப்போது காண்பது?

'சமைக்கவே சரியாப் போயிடும்...எங்க புதுசு கட்ட' என்ற அந்தப் பெண்ணின் குரல் தானே கேட்கிறது. இந்நிலை எல்லாம் மாற வேண்டும்.

அன்பு, நம்பிக்கை, காதல் என இழைத்துக் கட்டப்பட்ட குடும்ப பந்தத்தினை மகிழ்வாக்க மனைவியின் வலுவான கரம் தேவை.ஆதலினால் காதல் செய்வீர் உங்கள் மனைவியை.

நேசிக்கப்படுதல் மட்டுமல்ல நேசித்தலுமே வாழ்வை மேலும் அழகாக்கும். பல வித கனவுகளுடன் வாழ்வில் அடியெடுத்து வைக்கும் தேவதைகளை அன்புக் கரங்களால் வலுவூட்டம் கொடுங்கள். நம்பிக்கை கொடுக்கவும், நம்பி கை கொடுக்கவும் கணவனின் கரங்கள் இருக்கட்டும்.

மனதாலும், நினைவாலும் தாயாய் இருக்கும் தேவதைகளைக் கொண்டாடுவோம். நீரின்றி மட்டுமல்ல பெண்ணின்றியும் அமையாது உலகம் 🙏🏽

துன்பம் ஏன் மனிதர்களை துரத்துகிறது?

நமக்கு ஒருவர் துன்பம் விளைவிக்கும்போது,
நாம் அவர்களிடம் கோபம் கொள்கிறோம். பழிக்குப் பழி வாங்கத் துடிக்கிறோம்.

ஆனால்,
அது தவறான செயல்.

 நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால்,
அதற்குக் காரணம்,
நாம் முன் செய்த வினைப்பயன்தான்.

 இப்படி தத்துவார்த்தமாக பேசுவதும் எழுதுவதும் சுலபம் .

நடைமுறையில் கடைப்பிடிக்க
எவ்வளவு பொறுமை தேவை என்பதை உணர்த்த இதோ ஒரு ஆன்மிகக் கதை:

அசோகவனத்தில் சீதை இருந்தபோது, அவளை அரக்கியர்கள் பலர் துன்பப்படுத்தினர்.

அதற்காக சீதை அவர்களிடம் கோபம் கொள்ளவில்லை.
மிகுந்த பொறுமையுடன் சகித்துக்கொண்டாள்.

தனக்கு நேரிடும் துன்பங்கள் எல்லாம், தன் வினைப்பயன் காரணமாகவே ஏற்படுகின்றன என்று உறுதியாக நம்பினாள்.

ராவண சம்ஹாரம் முடிந்த பிறகு, அசோகவனத்தில் இருந்த சீதாபிராட்டியாரிடம் விவரம் சொல்ல வந்த அனுமன்,

பிராட்டியை வணங்கி,

''தாயே, ஸ்ரீராமபிரான் வெற்றி வாகை சூடிவிட்டார். ராவணன் மாண்டான்'' என்று கூறினார்.

அனுமன் கூறியதைக் கேட்டு மகிழ்ந்த சீதை,

''அனுமனே, நான் முன்பொரு முறை உயிர் துறக்க நினைத்த நேரத்தில்,
நீ வந்து எனக்கு ஆறுதல் கூறி காப்பாற்றினாய்.

இப்போதும் ராமபிரான் பெற்ற வெற்றிச் செய்தியை நீயே வந்து எனக்குத் தெரிவித்தாய்.

ஏற்கெனவே உனக்கு நான் சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தைத் தந்துவிட்டேன்.
முன்பை விடவும் அதிகம் சந்தோஷம் தரும் செய்தியை இப்போது கொண்டு வந்திருக்கிறாய்.

உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள்'' என்றார்.

அதற்கு அனுமன்,

''தாயே,
எனக்கு ஒரு வரமும் வேண்டியதில்லை. நான் விரும்புவது ஒன்றேதான்.

கடந்த பல மாதங்களாக உங்களைப் பாடாகப் படுத்திய இந்த அரக்கிகளை, நான் தீயில் இட்டுக் கொளுத்தவேண்டும். அதற்கு தாங்கள் அனுமதிக்கவேண்டும்'' என்று அனுமன் கேட்டுக்கொண்டார்.

ஆனால்,
அனுமனின் கோரிக்கையில் சீதைக்கு உடன்பாடு இல்லை.
எனவே அனுமனைப் பார்த்து, '

'அனுமனே, நீ நினைப்பதுபோல் இந்த அரக்கியர் என்னைத் துன்புறுத்தி இருந்தாலும்,
அதற்காக இவர்களை தண்டிப்பதில் எனக்கு சம்மதம் இல்லை.

நான் இப்படி துன்பம் அனுபவிப்பதற்குக் காரணம்,
நான் முன்பு செய்த செயலின் விளைவுதான்.
பொன்மானாக வந்த மாயமானுக்கு ஆசைப்பட்டு,
அதைப் பிடித்து வர என் கணவரை அனுப்பியதும்,
சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வராமலும்,
'லட்சுமணா, லட்சுமணா' என்று அபயக் குரல் எழுப்பியதாலும்,
பயந்து போன நான்,

எனக்குக் காவலாக இருந்த லட்சுமணனை
அனுப்பிப் பார்க்கச் சொன்னேன்.

அவர் என் கணவருக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று
மறுத்துக் கூறியும்,
நான் ஏற்றுக்கொள்ளாமல் சுடுசொற்களால் லட்சுமணனைக் கண்டித்துப் பேசினேன்.

ஒரு பாவமும் அறியாமல்,
இரவும் பகலுமாக எங்களைக் கண்ணிமைபோல் காவல் காத்த லட்சுமணனின் மனம் நோகும்படி
நான் பேசியதுதான்,
இங்கே நான் அனுபவித்த துன்பத்துக்குக் காரணம்.

எனவே,
நீ அரக்கியர்களை ஒன்றும் செய்துவிடாதே.
அவர்கள் அரக்கியர்கள் என்றாலும் பெண்கள்.
அவர்களுக்குத் தீங்கு செய்து நீ பெரும் பாவத்தைத் தேடிக்கொள்ளாதே'' என்று கூறினார்.
அனுமன் உண்மையைப் புரிந்துக்கொண்டார்.

நமக்கு மற்றவர்கள் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால்,
அதற்குக் காரணம் நாம் முன் செய்த தீவினைப் பயன்தான் காரணம்.

 ".கர்ம வினைகள் நமது வாழ்க்கையின் போக்கினை தீர்மானிக்கும் பெரிய சக்தி. ஆன்மிகம் என்பதே நமது கசடுகளை நீக்கி உள்ளம் உடல் தூய்மையை உருவாக்குவது..

*சர்வம் சிவமயம்