Friday, 8 November 2019

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது.

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.

கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....

*மன்னித்து மகான் ஆகுங்கள், மன நோய்களில் இருந்தும் விடுபடுங்கள்

மனிதன்கற்றுக்கொள்ள வேண்டிய_21பாடங்கள் ..! சாணக்கியர்

சிங்கத்திடம் இருந்து ஒன்றையும்,

கொக்கிடம் இருந்து இரண்டையும்,

கழுதையிடம் இருந்து மூன்றையும்,

கோழியிடம் இருந்து நான்கையும்,

காக்கையிடம் இருந்து ஐந்தையும்,

நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது,

நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும்,

வெயில், மழை என்று பாராமல் உழைக்கும்,

தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல்,

தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல்,

தேவையான பொருள்களை சேமித்து வைத்தல்,

யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல்,

தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல்,

உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல்,

நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல்,

தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

யார் ஒருவர் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறாறோ அவர் எதிலும் வெற்றி அடைவார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

இது நான் சொல்லலைங்க ..!

சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!

அருந்தமிழ் மருத்துவம் 500

இப்பாடல் அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ 
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து,

இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.
10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🤗மடையன்
🤗சுயநலக்காரன்
🤗முட்டாள்
🤗ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏பொய்யன்
😏துரோகி
😏பொறாமைக்கைரன்
😏மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬அனாதை
😬ஏழை
😬முதியவர்
😬நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑மனைவி
💑பிள்ளைகள்
💑குடும்பம்
💑 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋♂பொறுமை
🙋♂சாந்த குணம்
🙋♂அறிவு
🙋♂அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
👳தந்தை
💆தாய்
👷சகோதரன்
🙅சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
👎உணவு
👎தூக்கம்
👎சோம்பல்
👎பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃துக்கம்
🏃கவலை
🏃இயலாமை
🏃கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬மனத்தூய்மை உள்ளவன்
👬வாக்கை நிறைவேற்றுபவன்
👬கண்ணியமானவன்
👬உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம், யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ ☘ 

திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சனா முதலியார் பாலம்

1836-ஆம் ஆண்டு நெல்லை கலெக்டர் ஆர்.ஈடன் எழுதியிருந்த குறிப்பிலிருந்து...

திருநெல்வேலி-பளையங்கோட்டை இரட்டை நகரங்கள். இரண்டிற்கும் இடையில் 800 அடி அகலம் உள்ள தாமிரபரணி ஆறு

ஏப்ரல்-மே மாதங்கள் தவிர, ஆண்டு முழுவதும் வெள்ளம் கரைபுரண்டோடும். ஆற்றைக் கடந்திடப் படகில் தான் பயணித்திடல் வேண்டும்

படகிற்காகப் பலமணி நேரம் காத்திருத்தல் வேண்டும்

குழுவாகச் செல்வோர் எல்லோரும் ஒன்றாக ஒரே நேரத்தில் சென்றுவிட முடியாது

படகில் இடம் பிடித்திட முதலில் பயணிக்க லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் வாடிக்கையாகிவிட்ட சமாச்சாரங்கள்

சமூகவிரோதிகளின் திருவிளையாடல்களுக்குப் பஞ்சமிருக்காது

களவும்,கலகமும் குழப்பமும் பழகிவிட்ட நடைமுறை

1840-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10-ஆம் நாள் இரவு: E.P.தாம்சன் ஜில்லா கலெக்டராகப் பொறுப்பேற்று 5 நாட்கள் ஆன நிலை

தாமிரபரணிப் படகுத் துறையில் குழப்பம் கலகம் நாலைந்து கொலைகள் எனவே, கலெக்டர் தூங்காமல் தவித்துக் கொண்டிருந்தார்...

நெல்லை-பாளை நகரங்களுக்கிடையே பாலம் ஒன்றிருந்தால் சிந்தித்துக் கொண்டெ உறங்கியும் போனார்

ஆலோசனைக் கூட்டமும் அரை லட்ச மதிப்பீட்டில் பாலங் கட்டத் தீர்மானமும

கேப்டன் பேபர் W.H. ஹார்ஸ்லி நமது சுலோசன முதலியார் (தாசில்தார்) பதவிக்குச் சமமான சிராஸ்தார் பதவி வகித்ததால் அழைக்கப் பட்டவர் கலெக்டர் தாம்சன் தலைமையில் கூடினர்...

உடனடியாகப் பாலங்க்கட்டத் தீர்மானிக்கப்பட்டது

கேப்டன் பேபரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது

வரைபடம் தயாரானது...

760 அடி நீளம்,21.5 அடி அகலம், 60 அடி விட்டம் கொண்ட 11 ஆர்ச்சுக்கள் அவற்றைத் தாங்கிட இரட்டைத் தூண்கள்-என அமர்க்களமான வரைபடம் தயாரானது...

தூண்கள் ரோமானிய அரண்மனயை நினைவூட்டி

லண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தைப் போன்ற தோற்றப் பொலிவுடன் திகழ்ந்தது...

திட்ட மதிப்பீடு அரை லட்சம் கலெக்டர் உட்பட அனைவரும் மலைத்துப் போயினர்

இன்றைய மதிப்பில் அது பல கோடியைத் தாண்டி விடும்...

ஆனா மகிழ்ச்சியுடன் கலெக்டர் ஒப்புதல் அளிக்கின்றார்...

பணத்திற்கு என்ன செய்வது எங்கே போவது..??

மக்களிடம் வசூல் செய்வது என்று தீர்மானிக்கின்றார்..

அதே சமயம் கலெக்டர் அவரிடம் சிரஸ்தாராக வேலை பார்க்கும் சுலோசன முதலியார் பக்கம் கலெக்டரின் பார்வை செல்கின்றது...

அது சரி யார் இந்த சுலோசன முதலியார்..??

திருமணம் தொண்டை மண்டலத்தில் உள்ள ஓர் சிற்றூர் இங்கிருந்து நெல்லைக்குக் குடியேறியவர்கள் தான் முதலியாரின் மூதாதையர்கள்...

கோடீ்ஸ்வரக் குடும்பம்...

வீட்டில் தங்கக் கட்டிகள் பாளம் பாளமாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்குமாம்... தங்கம், வெள்ளி நாணயங்க்கள் சாக்கு மூட்டைகளில் கட்டிப் போட்டிருப்பார்களாம்... கௌரவத்திற்காகவே க்லெக்டர் ஆபீஸ் உத்தியோகம்...

குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்குச் சமமாக அலுவலகத்திற்கு வருபவர்...

நீளமான அல்பேகா' கருப்புக் கோட்டு ஜரிகைத் தலைப்பா அங்கவஸ்திரம் வைரக் கடுக்கன் ஆகியவ்ற்றோடு அலுவலகத்திற்கு வருவதே கம்பீரமாக இருக்குமாம்...

மக்களிடம் வசூல் வேட்டை அவருக்குத் தர்ம சங்கடமான நிலை...

நடந்தனவற்றை வீட்டில் மனைவியிடம் சொல்கின்றார்...

மனைவி வடிவாம்பாள் கவலைப்படாதீர்கள் தூங்குங்கள் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என ஆறுதல் அளிக்கின்றார்...

தூங்கிய சுலோசன மு்தலியாரின் நினைவலைகளின் சுழற்சி

அப்பாவைப் பற்றிய எண்ணங்களில் மூழ்குகிறார்...

வீர பாண்டிய கட்ட பொம்மன் புகழ் மேஜர் பானர்மெனிடம் மொழி பெயர்ப்பாளராகத் தனது தந்தை வேலை பார்த்தது நினைவுக்கு வருகின்றது...

1799-ஆம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்படுவதற்கு முன் கயத்தாறு மாளிகை விசாரணயில் முதல் சாட்சியே இவர் தந்தை இராமலிங்க முதலியார் தான்...

பின்னர், கர்னல் மெக்காலே தனது ஏஜெண்டாக்கித் திருவனந்தபுரத்திற்கு் அப்பாவை அழைத்துக் கொண்டது...

மனைவி வடிவாம்பாள் குடும்ப வசதி ஒரே மகன் வேதாத்திரிதாச முதலியார் திருவாங்கூர் உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது.... என்றெல்லாம் நெஞ்ச்சத்திரையில் நிழலாட பல்வேறு நினைவுகளுடன் இரவுப் பொழுதைக் கழிக்கின்றார் ஒரு முடிவெடுத்தும் விடுகின்றார்...

அவரது தந்தை மொழிப்பாலமாக (மொழி பெயர்ப்பாளர்) இருந்து சம்பாத்தியம் செய்ததை ஆற்றுப் பாலத்தில் போட முடிவு செய்கின்றார்
கணவனே கண்கண்ட தெய்வமென வாழும் வடிவாம்பாள் மறுக்கவில்லை..

மறுநாள் காலையில் கலெக்டரிடம், பாலங்கட்ட ஆகும் மொத்தச் செலவையும் தாமே ஏறுக் கொள்வதாக வாக்குக் கொடுக்கின்றார்...

சொன்னதுடன் வெள்ளித் தாம்பாளத்தில் தன் மனைவி தந்த தங்க நகைகளையும் கொஞ்சம் பணத்தையும் அச்சாரக் காணிக்கை என்று சொல்லிக் கலெக்டரிடம் கொடுக்கின்றார்...

கலெக்டருக்கோ இன்ப அதிர்ச்சி திக்கு முக்காடிப் போகின்றார்

வெள்ளையன்-கருப்பன் பேதங்கள் காணமற் போகின்றன மரபுகள் உடைகின்றன கலெக்டர், முதலியாரை, அப்படியே ஆவி சேர்த்து ஆலிங்கனம் செய்து பேச வார்த்தையின்றித் தவிக்கின்றார்...

பாலத் திருப்பணிக்குக் தனி மனிதர் தந்த நன்கொடை திருநெல்வேலி மாவட்டத்தையே திகைக்கச் செய்தது வரலாற்று உண்மை...

கலெக்டர் புது உத்வேகத்துடன் செயல்படுகின்றார் பாலமும் கட்டிமுடிக்கப் படுகின்றது...

இன்றும் அது சுலோச்சனா முதலியார் பாலம் என்று தான் அழைக்கப்படுகிறது....

திறப்பு விழாவில் சுலோச்சன முதலியார் முன் நடக்க கலெக்டர் உட்பட மற்றவர்கள் பின் நடந்த செய்தியும் உண்டு...

மக்கள் நலனுக்காக சொந்த பணத்திலேயே பாலம் கட்ட உதவிய மனிதர் வாழ்ந்த நாட்டில் இன்று எத்தகைய அரசியல் வாதிகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது.....

Thursday, 26 September 2019

கர்ம வினை.

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.  விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.  அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல்
 இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற  கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று.

 காரணம்

 மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.

 உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.

 எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து!!!

சிவ கட்டளை !!!

மந்திரம் தேடாதே
ஒரு தந்திரமும் நாடாதே
உன்னைத் தேடு
என்னை நாடுவாய்.

ஊர் ஊராக சுற்றாதே
உன் உடலை சுற்று ..

ஊர் உனக்கு மகுடம் சூட்டி
உத்தமன் என பட்டம் தந்தாலும்!
உடல் உன்னை கை விட்டால்
உன் பட்டமும்
உன் பதவியும்
பிடி சாம்பலாகிவிடும்.
...
புறத்தில்
உன் குடும்பத்தை நேசித்தாய்
அது உன் குடும்பம்
என கண்டும் கொண்டாய்..

ஓடி ஓடி உழைத்தாய்
உன் குடும்பத்திற்கு
காவல் தெய்வமாக நின்றாய்..
ஆனால் *உனக்கு
காவல் தெய்வமாக*
உன் உயிருக்கு
காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே..

அக குடும்பத்தை மறந்து விடாதே.
உன் அக குடும்பம் உன் உடலே ..
உன் அக குடும்பம்
சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில்
நீ இருக்க இயலுவதில்லை
..
உன் உள் குடும்பம் உன் உடலே!
அதை மறந்தால் உன்
வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..
...
மற்ற உயிர்களுக்கு
ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு

ஒருவன் அவன்
உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை.
காரணம் அந்த உடல்
அவன் உயிருக்காகவே
சிறப்புமிக்க
வரமாக கொடுக்கப்பட்டதால்..
...
உடலுக்கு ஒருவன் செய்யும்
தொண்டே சிவ பூஜை
..
உடலுக்கு உள் சென்று
உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே
ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..
...
உடல் அனுமதித்தால் தான்
ஒருவன்
சித்தனும் ஆக முடியும்..
...
ஒருவன்
எப்படி பட்டவன் ஆக வேண்டும்
என்று தீர்மானிப்பது
அவனின் எண்ணங்களே..
...
ஆனால் *அந்த
எண்ணங்களை
தீர்மானிப்பது
சிவ சாட்சியான உடலே
...
ஒருவன் எதுவாக
ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே..
...
ஒருவன் உண்ணும் *உணவும்
பேணி காக்கும் உடலும்
அழைத்துசெல்லும்
அதன் அதன் தன்மைக்கு ஏற்ப...*
..
ஒருவன் அவன்
உள் குடும்பமான
உடலை கவனித்தால்...
...
அந்த உள் குடும்பமே
உன் வெளி குடும்பத்தை காக்கும்..
...
பிறந்த ஒவ்வொருவருக்கும்
அவரவர் குலத்தின்
சிவ குலதெய்வம்
அவரின் உடலே..

உலகின் அனைத்து ரகசியமும் உன்
உடலுக்கு உள்ளே..
அதை தேடு இதுவே சிவ கட்டளை..

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"

ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,

இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,

இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல...!!!

தாய் தந்தையரை நேசியுங்கள்

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என்மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.

' என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

" உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க..."

" சரி. அதுக்கென்ன இப்போ ?"

" அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க ."

வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது.

நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.

எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்...

அதுவும் உறவினர் , நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா ? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள் ! நினைக் கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

" என்ன பதில் இல்ல...உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன்."

' ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா ' என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.

" சரி வைதேகி ! நீயே கேட்டுடு " என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

" அத்தை !" குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா.. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால்தானே அவங்க இங்க தங்க முடியும் ! தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க " என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் .

அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது!
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள் ! இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.

என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.

" உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா ! இங்கேயே இருந்துக்கோ. " மேலுக்குச் சொல்லி பெருமூச்
சொன்றை விட்டேன்.

" அது கூடாதுடா ராகவா ! சின்னஞ்சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன..நான் ஒண்டிக்கட்டை !
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே !"

அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

" ராகவா ! நீ குழந்தையா இருந்தபோது
இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்துகொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்... எத்தனை தடவைகள்....அதெல்லாம் மறக்க முடியுமா....கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் " என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.

" சரிம்மா ! நீ படுத்துத் தூங்கு !" இன்னும்கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவமுடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து
நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம்.

அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துகொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பர். இது
அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே !

நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது.

''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.

அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.
வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.

" என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?"

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

" பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்...ம்..என்ன செய்றது ! " என்றவள் , " ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா ?"

' என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.

" கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது ! "

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி.

அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா?

அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா?  அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக்  கூட காப்பாத்த முடியலையோ?

அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை;

இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?

பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.

ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ?