Thursday, 26 September 2019

கர்ம வினை.

ஒரு அரசன் அந்தணர்களுக்கு ஒரு நாள் உணவளித்துக் கொண்டிருக்கையில் வானில் ஒரு கழுகு, தனக்கு இரையாக பாம்பு ஒன்றை தன் கால்களில் பற்றிக் கொண்டு அவ்வழியே பறந்து சென்றது.

பாம்பின் வாயிலிருந்து சில துளி விஷம் அரசன் வைத்திருந்த உணவுப் பாத்திரத்தில் விழுந்து விட்டது.

அரசன் அந்த உணவை ஒரு அந்தணருக்கு அளிக்க, அதை உண்ட மறு கணமே அவர் இறந்து போனார்.

அரசன் மிகவும் வருத்தம் அடைந்தான்.

கர்மாக்களுக்கான வினைகளை நிர்ணயிக்கும் சித்திரகுப்தனுக்கு இந்த கர்மவினையை யாருக்குக் கொடுப்பது என்று குழப்பமாகிவிட்டது.

கழுகிற்கா, பாம்பிற்கா அல்லது அரசனுக்கா?  கழுகு அதன் இரையைத் தூக்கிக் கொண்டு சென்றது அது அதன் தவறு இல்லை.  விஷம் இறந்துபோன பாம்பின் வாயிலிருந்து வழிந்தது அது பாம்பின் குற்றம் இல்லை.  அரசனுக்கும் உணவில் பாம்பின் விஷம் கலந்தது தெரியாது. அது அவனும் அறியாமல் நடந்த விஷயம்.

இதுபற்றி எமதருமனிடமே கேட்கலாம் என்று எமனிடம் சென்று தன் குழப்பத்தைக் கூறினான்.

சித்திரகுப்தன் கூறியதைக் கேட்ட எமதர்மன், சற்று நேர சிந்தனைக்குப் பிறகு, இதற்கான விடை விரைவில் கிடைக்கும் அதுவரை பொறுமையாக இரு என அறிவுறுத்தினான்.

ஒரு சில நாட்கள் கழித்து அரசன் உதவி நாடிச் சென்ற சில அந்தணர்கள் அரண்மணைக்கு வழி தெரியாமல், சாலையோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்மணி ஒருவரிடம் வழி கேட்டார்கள்.

அப்பெண்மணியும் அவர்களுக்கு சரியான பாதையை  கூறியதோடு நில்லாமல்
 இந்த அரசன் அந்தணர்களைக் கொல்பவன் சற்று எச்சரிக்கையாக இருங்கள் என்றும் கூறினாள்.

இந்த வார்த்தைகளை அவள் கூறி முடித்ததும், சித்திரகுப்தனுக்கு தெளிவு பிறந்து விட்டது. அந்தணரைக் கொன்ற  கர்மாவின் வினை முழுவதும் இந்தப் பெண்மணிக்கே சேரும் என்று.

 காரணம்

 மற்றவர்கள் மீது பழி சுமத்தும் போது அதில் உண்மை இருந்தாலும் அவர்கள் செய்த கர்ம வினையில் பாதி, பழி சுமத்துபவருக்கு வந்து சேர்ந்துவிடும்.

 உண்மையை உணராமல் அபாண்டமாக பழி சுமத்துவோருக்கு அந்த கர்மவினை முழுவதும் சேரும்.

 எனவே, மற்றவர்கள் பற்றி பேசும் போது எச்சரிக்கையுடன் பேச வேண்டும்.

ஸ்ரீமத் பாஹவதத்திலிருந்து!!!

சிவ கட்டளை !!!

மந்திரம் தேடாதே
ஒரு தந்திரமும் நாடாதே
உன்னைத் தேடு
என்னை நாடுவாய்.

ஊர் ஊராக சுற்றாதே
உன் உடலை சுற்று ..

ஊர் உனக்கு மகுடம் சூட்டி
உத்தமன் என பட்டம் தந்தாலும்!
உடல் உன்னை கை விட்டால்
உன் பட்டமும்
உன் பதவியும்
பிடி சாம்பலாகிவிடும்.
...
புறத்தில்
உன் குடும்பத்தை நேசித்தாய்
அது உன் குடும்பம்
என கண்டும் கொண்டாய்..

ஓடி ஓடி உழைத்தாய்
உன் குடும்பத்திற்கு
காவல் தெய்வமாக நின்றாய்..
ஆனால் *உனக்கு
காவல் தெய்வமாக*
உன் உயிருக்கு
காக்கும் கடவுளாக,
இருப்பது உன் உடலே..

அக குடும்பத்தை மறந்து விடாதே.
உன் அக குடும்பம் உன் உடலே ..
உன் அக குடும்பம்
சரியில்லை என்றால்
சூரிய குடும்பத்தில்
நீ இருக்க இயலுவதில்லை
..
உன் உள் குடும்பம் உன் உடலே!
அதை மறந்தால் உன்
வெளி குடும்பம் கதறினாலும்
உன்னை காக்கவும் யாரால் முடியும்..
...
மற்ற உயிர்களுக்கு
ஒருவன் செய்யும் பாவத்திற்கு
விமோசனம் உண்டு

ஒருவன் அவன்
உடலுக்கே செய்யும் பாவத்திற்கு
விமோசனம் இல்லை.
காரணம் அந்த உடல்
அவன் உயிருக்காகவே
சிறப்புமிக்க
வரமாக கொடுக்கப்பட்டதால்..
...
உடலுக்கு ஒருவன் செய்யும்
தொண்டே சிவ பூஜை
..
உடலுக்கு உள் சென்று
உனக்காக உழைக்கும்
உறுப்புகளை வணங்குவதே
ஆலயம் சென்று
வணங்குவதை விட உயர்வானது..
...
உடல் அனுமதித்தால் தான்
ஒருவன்
சித்தனும் ஆக முடியும்..
...
ஒருவன்
எப்படி பட்டவன் ஆக வேண்டும்
என்று தீர்மானிப்பது
அவனின் எண்ணங்களே..
...
ஆனால் *அந்த
எண்ணங்களை
தீர்மானிப்பது
சிவ சாட்சியான உடலே
...
ஒருவன் எதுவாக
ஆக விரும்புகிறானோ
அதை தீர்மாணிப்பதும் உடலே..
...
ஒருவன் உண்ணும் *உணவும்
பேணி காக்கும் உடலும்
அழைத்துசெல்லும்
அதன் அதன் தன்மைக்கு ஏற்ப...*
..
ஒருவன் அவன்
உள் குடும்பமான
உடலை கவனித்தால்...
...
அந்த உள் குடும்பமே
உன் வெளி குடும்பத்தை காக்கும்..
...
பிறந்த ஒவ்வொருவருக்கும்
அவரவர் குலத்தின்
சிவ குலதெய்வம்
அவரின் உடலே..

உலகின் அனைத்து ரகசியமும் உன்
உடலுக்கு உள்ளே..
அதை தேடு இதுவே சிவ கட்டளை..

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….

ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:
உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?
அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…
எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.
கடந்த ஒரு வருடமாக நான் வேறு வேலைக்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறேன். எதுவும் கிடைக்கவில்லை. உங்களைப் பார்த்தால் பெரிய மனிதர் போல இருக்கிறீர்கள். எனக்கு நீங்கள் ஒரு வேலை வாங்கிக்கொடுத்தால் பிச்சையெடுப்பதை விட்டுவிடுகிறேன்.

“உனக்கு நிச்சயம் உதவவேண்டும் என்று தோன்றுகிறது.
ஆனால், வேலை வாங்கி தரும் எண்ணம் எனக்கில்லை.
வேறு ஒன்றை மனதில் வைத்திருக்கிறேன்.”

“வேறு ஒண்ணா…?
எதுவா இருந்தாலும் சரி, என் பிரச்சினை தீர்ந்தா போதும்” என்றான் பிச்சைக்காரன்.

“உன்னை என்னுடைய பிசினஸ் பார்ட்னர் ஆக்கப்போகிறேன்.”

“என்னது பிசினஸ் பார்ட்னரா...?"

ஆமாம்…
எனக்கு சொந்தமாக பலநூறு ஏக்கரில் விவசாய நிலம் இருக்கிறது.
அதில் விளையும் தானியங்களை நீ சந்தையில் விற்கலாம்.
உனக்கு கடை வைக்க இடம், தானியம் உட்பட அனைத்தையும் தருகிறேன்.
நீ செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். தானியங்களை விற்று லாபத்தில் எனக்கு பங்கு தரவேண்டும். அவ்வளவு தான்!”

“முதலீடே செய்யாமல் இப்படி ஒரு வாய்ப்பா? கடவுள் கண்ணை தொறந்துட்டாண்டா குமாரு” என்று பிச்சைக்காரன் மனம் குதூகலத்தில் மூழ்கியது.

“சார்… அது வந்து… லாபத்தை நாம எப்படி பிரிச்சிக்கப்போறோம்…?
உங்களுக்கு 90% எனக்கு 10% ஆ? இல்லை உங்களுக்கு 95% எனக்கு 5% ஆ? எப்படி??” ஆர்வத்தோடு கேட்டான்.

“இல்லை… நீ 90% எடுத்துகிட்டு எனக்கு 10% கொடுத்தா போதும்”

அதைக்கேட்ட பிச்சைகாரனுக்கு ஒரு கணம் பேச்சே வரவில்லை.

“என்ன சார் சொல்றீங்க?” நம்பமுடியாமல் கேட்டான்.

“ஆமாம்ப்பா உனக்கு 90%
எனக்கு ஜஸ்ட் 10% போதும்.
எனக்கு பணம் தேவையில்லை.
அது நீ நினைக்கிறதைவிட நிறைய என்கிட்டே இருக்கு. இந்த 10% கூட நான் கொடுக்கச் சொல்றது என் தேவைக்காக இல்லை. உனக்கு நன்றியுணர்ச்சி என்னைக்கும் இருக்கனுமேங்குறதுக்காகத் தான்.”

“எனக்கு வாழ்க்கையையே பிச்சை போட்ட தெய்வமே… நான் உனக்கு என்னென்னைக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கேன்” அடுத்தநொடி பிச்சைக்காரன் அந்த செல்வந்தரின் கால்களில் விழுந்துவிட்டான்.

இவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தப்படி அனைத்தும் நடைபெற துவங்கியது. பிச்சைக்காரனிடம் செல்வம் குவிய ஆரம்பித்தது. முதலில் பணம் ஆயிரங்களில் புரளத் துவங்கி அடுத்த சில வாரங்களில் அது லட்சங்களை எட்டியது.

ஆனால் ஒரு கட்டத்தில் பிச்சைக்காரன் தனக்கு இந்த வாழ்க்கையை அளித்த அந்த வள்ளலை மறந்தே விட்டான்.

புத்தம்புதிய ஆடைகளை உடுக்கத் துவங்கியவன், தான் கடைக்கு வந்து செல்வதற்கு ஒரு வாகனத்தை வாங்கிவிட்டான். கழுத்தில் மைனர் செயின் அணிந்துகொண்டான். இரவு பகலாக லாபமே குறிக்கோள் என்று உழைத்தான். தானியங்களின் தரம் இவன் கடையில் நன்றாக இருந்தபடியால் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒரு சில மாதங்கள் சென்றது. அதுவரை தனது பிஸ் பார்ட்னரான அந்த செல்வந்தனின் பங்காக தினசரி 10% ஒதுக்கி வந்தவன் ஒரு கட்டத்தில் தனக்கு தானே கேட்டுக்கொண்டான்….

“என்னோட பார்ட்னருக்கு நான் ஏன் 10% கொடுக்கணும்? அவர் கடைக்கே வர்றதில்லையே. உழைப்பு எல்லாம் என்னோடது. இரவு பகலா நான் தான் வேலை செய்யுறேன்… இனி எனக்கே 100% லாபம்” என்று முடிவு செய்தான்.

அடுத்த சில நிமிடங்களில் செல்வந்தர் புதுப்பணக்காரனாகிவிட்ட பழைய பிச்சைக்காரனிடம் தனது லாபத்தின் பங்கைப் பெற கடைக்கு வந்தார்.

“உழைப்பு எல்லாம் என்னோடது. அப்படியிருக்க உங்களுக்கு எதுக்கு நான் 10% தரனும்? எனக்கு தான் எல்லா லாபமும் சொந்தம்!” என்று ரூல்ஸ் பேசினான்.

அந்த செல்வந்தனின் இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன சொல்வீர்கள்?

ஒரு செகண்ட் யோசியுங்களேன்….
இது தான் நமது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கிறது.

இறைவன் தான் பிசினஸ் பார்ட்னர்.
நாம் தான் அந்த புதுப்பணக்காரன் (?!).

இறைவன் நமக்கு பிச்சை போட்டது இந்த வாழ்க்கையை.
ஒவ்வொரு நொடியை.
நாம் விடும் ஒவ்வொரு மூச்சை.

ஐம்புலன்களை நமக்கு கொடுத்து,
அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி ஆற்றல்கள் கொடுத்தான் இறைவன். அதுமட்டுமா?
ஐம்புலன்கள் போதாது என்று
கை, கால், இதயம், சிறுநீரகம், கல்லீரல் என விலை மதிக்கவே முடியாத நம் உடலுறுப்புக்கள் கொடுத்தான்.
இப்படி இறைவன் நமக்கு கொடுத்தவற்றை பட்டியலிட துவங்கினால்…
அது முடிவே இல்லாமல்தான் போய்கொண்டிருக்கும்.

இவ்வளவு தந்த அவனுக்கு
ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான்.
அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன்.
நமது நன்றியுணர்ச்சிக்காக
அதை எதிர்பார்க்கிறான்.
அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.

நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?

இறைவனை வணங்குவதோ,
வேதங்களை படிப்பதோ,
ஆலயத்துக்கு செல்வதோ,
தொண்டு முதலானவற்றில்
நம்மை ஈடுபடுத்திக்கொள்வதோ அல்லது
சக மனிதர்களுக்கு உதவுவதோ
இவை யாவும் செய்வது நமக்காகத்தான், நம்முடைய நன்மைக்காகத்தான் என்றாலும்,

இறைவன் நமக்கு அளித்த
உயிரையும், உடலையும்,
உறுப்புகளையும்
அவன் கூறிய வழியில்,
அவன் விரும்பிய வழியில்
நடத்திக் கொண்டு இருக்கிறோம்,
என்ற திருப்தியோடு,

இவ்வளவையும் கொடுத்த நம்
இறைவனுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம் என்று காட்டத்தான்.
மற்றபடி இறைவனுக்கு அது தேவை என்பதால் அல்ல...!!!

தாய் தந்தையரை நேசியுங்கள்

காஃபி குடித்த டம்ளரை என்னிடமிருந்து வாங்கிக்கொண்ட என்மனைவி, நகராமல் அப்படியே நின்றாள்.

' என்ன ' என்பதுபோல் வைதேகியை ஏறெடுத்துப் பார்த்தேன்.

" உங்கப் பையனும் மருமகளும் நாளை காலையில ஹனிமூன் முடிஞ்சூ சிம்லாவிலேர்ந்து திரும்பி வராங்க..."

" சரி. அதுக்கென்ன இப்போ ?"

" அவங்க தங்க ரூம் வேண்டாமா..அந்த ரூம்லதான உங்க அம்மா தங்கியிருக்காங்க ! இவ்வளவுநாள் இருந்தது போதும். அவங்கள ஹாலுக்கு ஷிப்ட் பண்ணச் சொல்லுங்க ."

வாஸ்தவம்தான். முப்பது வருஷத்துக்கு முன்னால் என் தந்தை கட்டிய வீடு.பாத் ரூம் அட்டாச்சுடன் இரண்டு படுக்கையறைகள். ஹால். அதிலும் அட்டாச்டு பாத்வசதி உண்டு.

சமையலறை; டைனிங் ரூம் ; பூஜையறை என்று விஸ்தாரமாய் கட்டப்பட்ட வீடு. இப்போது என் அம்மா தங்கிக் கொண்டிருக்கும் அறைதான் என் தந்தை உபயோகித்தது.

நான் இருக்கும் படுக்கையறையை ஆரம்பத்திலிருந்தே பயன்படுத்தி வருகிறேன்.

எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள்வரை என் தந்தை உயிருடன் இருந்தார்.

இன்றுவரை தன்ரூம் என்ற உரிமையுடன்
இருந்து வருகிறாள் அம்மா. இப்போது தடாலென்று ஹாலுக்கு வரச் சொன்னால்...

அதுவும் உறவினர் , நண்பர்கள் அடிக்கடி வருவர். ஹாலில் உட்கார்ந்தபடிதான் பேசுவர். அது அம்மாவுக்கு இடைஞ்சலா இருக்காதா ? தனக்கென்று இருக்கும் பிரைவேஸி இல்லாமல் எப்படி மீதியிருக்கும் காலத்தை தள்ளுவாள் ! நினைக் கும்போது தொண்டையை அடைத்தது எனக்கு.

" என்ன பதில் இல்ல...உங்களுக்கு சொல்ல கஷ்டமாயிருந்தால் நான் உங்கம்மாக்கிட்டப் பேசறேன்."

' ஹாலுக்கு ஷிப்ட்டாகி வாம்மா ' என்று நான் கேட்பதைவிட என் மனைவியே கேட்பதுதான் சரி என மனதில் பட்டது.

" சரி வைதேகி ! நீயே கேட்டுடு " என்றேன்.

அடுத்த ஐந்து நிமிடங்களில் வைதேகி என் அம்மா படுத்திருக்கும் அறைக்குள் நுழைந்தாள்.

" அத்தை !" குரல் கேட்டதும் அம்மா விசுக்கென்று எழுந்து உட்கார்ந்தாள்.

நாளைக் காலை உங்க பேரனும் அவன் பெண்டாட்டியும் டூர் முடிஞ்சு திரும்பி வராங்க. அவங்க தங்க ரூம் வேண்டாமா.. நீங்க காலிபண்ணிக் கொடுத்தால்தானே அவங்க இங்க தங்க முடியும் ! தயவு செஞ்சு நிலைமையைப் புரிஞ்சுக்கிட்டு ஹாலுக்கு வரப் பாருங்க " என்று கூறி விட்டுத் திரும்பினாள்.

அவள் அடுக்களைக்குள் நுழைந்ததும் நான் அம்மா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன் .

அம்மாவைப் பார்க்க பாவமாயிருந்தது!
பிரம்மை பிடித்தால் போல் அமர்ந்திருந்தாள் ! இதுவரை ஸ்வாதீனத்தோடு உரிமை கொண்டாடிய பிரைவேட் ரூம் தனக்கு கிடையாது இனி கிடையாது என்பதை அவளால் தாள முடியவில்லை.

அம்மா அருகில் கட்டில் மீது உட்கார்ந்தேன்.

என் கைகளை ஆதூரத்துடன் பற்றிக்கொண்டாள். அவள் கைகள் நடுங்கின.

" உனக்கு இஷ்டமில்லேன்னா நீ ஹாலுக்கு வரவேணாம்மா ! இங்கேயே இருந்துக்கோ. " மேலுக்குச் சொல்லி பெருமூச்
சொன்றை விட்டேன்.

" அது கூடாதுடா ராகவா ! சின்னஞ்சிறுசுகள். அதுங்க ஹால்ல தங்கமுடியாது...
எனக்கென்ன..நான் ஒண்டிக்கட்டை !
ஹாலுக்குத்தானே போகப்போறேன்.
வீட்டைவிட்டு இல்லையே !"

அம்மா இப்படிச் சொன்னதும் எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன்.

சிறிதுநேரம் மெளனமாயிருந்த அம்மா தொடர்ந்தாள்.

" ராகவா ! நீ குழந்தையா இருந்தபோது
இதே கட்டில்லதான் என்னோட படுத்திருந்தே. உடம்புக்கு முடியாம நான் இருக்கறபோது உங்கப்பா சாதம் பிசைந்துகொண்டுவந்து இந்தக் கட்டில்ல உட்கார்ந்துதான் உனக்கு சாதம் ஊட்டுவார்... எத்தனை தடவைகள்....அதெல்லாம் மறக்க முடியுமா....கைகளை என்னிடமிருந்து விடுவித்து கட்டிலை ஆதங்கத்துடன் தடவிப் பார்த்துக் கொண்டாள்.

சட்டென என்னை நோக்கித் திரும்பிய அம்மா , " டேய் ராகவா ! இன்னிக்கு ராத்திரி மட்டும் என்னை இங்க தங்கவிடுடா.
நாளை உதயத்தில் நான் ஹாலுக்கு வந்துடறேன் " என் கையைப் பிடித்து கெஞ்ச, துக்கம் பீறிட்டது எனக்கு.

" சரிம்மா ! நீ படுத்துத் தூங்கு !" இன்னும்கொஞ்சநேரம் அங்கு தங்கினால் நான்
ஓ வென்று அழுதுவிடுவேன், என எண்ணி அம்மாவைப் படுக்கவைத்து, என் அறைக்குத் திரும்பினேன்.

என் சிந்தனை பூராகவும் அம்மாவைப் பற்றியே இருந்தது. அம்மா கூச்ச சுபாவமுடையவள். யாராவது அறைக்குள் இருந்தாலே உடனே எழுந்து உட்கார்ந்து விடுவாள். உடம்பு முடியாமல் போனாலும் உட்கார்ந்தபடிதான் இருப்பாள். அதற்காகவே நாங்கள் யாராயிருந்தாலும் ஐந்து
நிமிடமோ அல்லது பத்துநிமிடமோ இருந்துவிட்டு வெளியேறிவிடுவோம்.

அடிக்கடி பாத்ரூம் போக எழுந்துகொள்வாள். ஹாலில் அடிக்கடி யாராவது நடமாடிக்கொண்டே இருப்பர். அதோடு ஹாலில்தான் டிவி இருக்கு. டிவி புரோக்ராம்களை என் மனைவியும், மகனும் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பர். இது
அம்மாவுக்குப் பெரிய தலைவலியாக இருக்குமே !

நினைக்க நினைக்க நெஞ்சில் வேதனை பிடுங்கித் தின்றது.

''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்பது தவறு இல்லையா?'' என்று வைதேகியிடம் சொல்லிட வேண்டியது தான் என நினைத்துக் கொண்டே தூங்கி விட்டேன்.

ஆனால் மறுநாள் காலை அம்மா இதற்கொரு விடை கொடுத்தாள்; ஆம். அம்மா நள்ளிரவே காலமாகி விட்டாள்.

ஹாலில் இருந்துகொண்டு தான் அவஸ்தைப்பட்டு அதனால் பிறத்தியாருக்கும் கஷ்டம் கொடுப்பதை விரும்பாமல் போய்ச்சேர்ந்துவிட்டாள்.

அம்மாவின் காரியங்கள் நடந்து முடிந்தன.

அன்று இரவு அம்மாவைப்பற்றி சிந்தனையோடு கட்டிலில் அமர்ந்திருந்தேன்.
வைதேகி என்னருகில் வந்து நின்றாள்.

" என்ன அம்மாவைப்பத்தி சிந்தனையா?"

நான் பதிலேதும் சொல்லவில்லை. அவளே தொடர்ந்தாள்.

" பாவம் உங்கம்மா ! இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கலாம்...ம்..என்ன செய்றது ! " என்றவள் , " ஆனால் ஒரு விஷயத்த கவனிச்சீங்களா ?"

' என்ன' என்பதுபோல் அவளைப் பார்த்தேன்.

" கடைசிவரை ஹாலுக்கு வரல்ல. தன் ரூமுன்னு உரிமை கொண்டாடி, அங்கேயே உசிர விட்டாங்க. அவங்க சாமர்த்தியம் யாருக்கும் வராது ! "

சுருக்கென்று சொல்லிவிட்டு அகன்றாள் வைதேகி.

அம்மாவை வெளியேத்தணும்னு ரூமைக் கேட்டாளா? இல்ல, பையனை வைக்கணும்னு ரூமைக் கேட்டாளா?

அப்பா உயிருடன் இருந்திருந்தா அந்த ரூமை கேட்டிருப்பாளா?  அம்மா தனியா இருந்தது அவங்களுக்கு பலவீனமோ? அம்மா ''நான் தனியா இல்ல, பையனோடு தான் இருக்கேன்னு' சொன்ன நம்பிக்கையைக்  கூட காப்பாத்த முடியலையோ?

அவளை அழைத்து ''இந்த வீடு அப்பாவும் அம்மாவும் கஷ்டப்பட்டு கட்டிய வீடு; மகன் என்பதற்காக எனக்கு ஒரு ரூமைக் கொடுத்தார்கள் என் மகனுக்கு வீடு அல்லது ரூம் வேண்டுமென்றால் நாம் தானே கட்டிக் கொடுக்கவேண்டும்; அம்மாவை ரூமைக் காலி செய்து கொடு எனக் கேட்டது தவறு இல்லையா?''என்று சொல்ல நினைக்கிறேன்; முடியவில்லை;

இது என்னுடைய கையாலாகதத் தனமோ? நான் மட்டும் தான் இப்படியா? இல்லை, எல்லா ஆண்களும் இப்படித் தானா?

பெண்' இருந்தும் 'சன்' இருந்தும் பல அப்பாக்களை இன்று 'பென்சன்' தான் காப்பாற்றுகிறது. பணத்தால் மட்டும் அவர்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து விடுமா.

ஒவ்வொரு ஆண் மகனின் வாழ்க்கையிலும் என்னை ஏன்னு கேட்க ஆளேயில்லை என்ற வாக்கியம் வயதுக்கேற்ப மாறும். இளமையில் கர்வமாக முதுமையில் பரிதாபமாக!

வாழ்க்கையிலும் சரி, பணியிலும் சரி நமக்கு எத்தனை அழுத்தங்கள் இருந்தாலும் பெற்றவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அன்னையின் மடியில் தலை வைத்து அயருங்கள். தந்தையின் கரங்களை பிடித்து கொண்டு கடைவீதிக்கு செல்லுங்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை உணருங்கள். இன்று நீங்கள் பெற்றோரை ஆதரித்து அரவணைத்தால், நாளை உங்கள் பிள்ளைகளும் உங்களை ஆதரிப்பர் என்பதை சொல்லி தான் தெரிய வேண்டுமா இதைவிட வேறு புண்ணியமும் வேண்டுமா ?