Tuesday, 27 July 2021

சஹாதேவனின் ஜோதிடத்தை மாற்றிய பரமாத்மா ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா

 சஹாதேவன் வருத்தமாக, அமர்ந்திருப்பதைக் கண்ட வாசுதேவர்

இளவரசே சஹாதேவா !!

நீ ஏன் வருத்தமாக இவ்வனத்தில் அமர்ந்திருக்கிறாய் !!

அத்தை  குந்தி பூஜைக்கு மலர்கள் கொய்யசென்ற ,உன்னை காணவில்லை என்ற வருத்தத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்.

உன் வருத்தத்திற்கு காரணம் என்ன உன்னை வணங்கிவிட்டு சொல்கிறாரே யார் அவர் ?

பணிகிறேன் வாசுதேவரே நம் அஸ்தினாபுரத்தின் பிரஜை அவர், தன் ஜாதகத்தை கணித்து, அவரின் திருமணத்திற்கு, ஒரு நல்ல முகூர்த்த நாள் குறித்து தரச் சொன்னார்.

அதற்காகவா வருத்தப்படுகிறாய் சஹாதேவா ?

இல்லை வாசுதேவரே! அவரின் ஆயுட்காலம் மிகவும் குறைவாக உள்ளது .

அதனால் நாளை வா கணித்துக்  கூறுகிறேன் என்று ,அவரை அனுப்பி விட்டேன்"

ஆனால் சஹாதேவா ! விதி முடிந்தால் அனைவரும் இப்புவியுலக வாழ்க்கையை முடித்துக் செல்லத்தானே வேண்டும்? இதில்  யாரும் விதிவிலக்கல்ல

ஏதாவது பரிகாரம் இருக்குமே !

கூற வேண்டியது தானே!! .சஹாதேவா.!

உண்மைதான் வாசுதேவரே! ஆனாலும் என் மனம் ஏதோ ஒன்றை எண்ணி ,கணக்கிறது.

அவர் முப்பிறவியிலும் எப்பாவத்திற்கும் ஆளாகாதவர் !

மேலும் ,அப்பிரஜை இப்பிறவியிலும் இம்மியளவு கூட ,அறநெறி தவறாது வாழ்ந்து வருபவர்.

இவர் போன்றோர் எல்லாம் காரணமின்றி இறக்க நேரிட்டால் ,அறநெறி போற்றி வாழ்ந்து என்ன பயன் வாசுதேவரே 

முதலில் பரிகாரம் என்னவென்று கூறு !

அவரின் ஆயுளை நீட்டிக்க முடிகிறதா? என்று பார்ப்போம்.

இயலாது வாசுதேவரே! 

நான் ஏற்கனவே, உங்களிடம்  பரிகாரத்திற்கான, நேரம் அவரிடம் இல்லை என்றேனே!

காலனையும் காலத்தினால் கணப்பொழுது காத்திருக்க வைக்க முடியும் சஹாதேவா ! 

பரிகாரத்தை முதலில் கூறு 

அவரின் ஜாதகத்தின்படி ஒரு கோயிலைக் கட்டி, குடமுழுக்கு அவரே செய்தார் என்றால் ,அவர் தீர்க்காயுள் பெற்று ,வாழ்வாங்கு வாழ்வார் . 

மேலும் அப்பிரஜையின் மரணம் இன்று நடு ஜாமத்தில் நிகழப்போகிறது.! 

எப்படி அவரால் இந்த பரிகாரத்தை நிறைவேற்ற முடியும் மாதவா!?

சஹாதேவா விதி பலன் எதுவோ அது நடக்கட்டும் அங்கு அத்தை குந்தி பூஜைக்காக காத்திருப்பார் செல்வோம் வா!

மறுநாள் அதிகாலையில் சஹாதேவன் அந்த பிரஜையை அரண்மனை வாயிலில் கண்டவுடன், ஆனந்த அதிர்ச்சியுற்றான்.

சஹாதேவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. 

நான் கணித்தது இதுவரை பொய்த்ததில்லையே !

அப்படி இருக்க இவர் எவ்வாறு உயிரோடு இருக்கிறார் ! 

இது எப்படி சாத்தியம் என்று எண்ண ஓட்டங்களில் மனம் மூழ்கியது.

ஹஸ்தினாபுரத்து பிரஜையே நேற்று நீங்கள் என்னை வந்து, சந்தித்து சென்றபின் நடந்தவற்றை மறைக்காமல் கூறுங்கள் என்றார் சஹாதேவன்.

இளவரசர் சகாதேவரே என் இல்லத்திற்கு திரும்பும் வேளையில்

கண்ணுக்கு புலப்படாத காரிருள் மேகங்கள் வானில் தோன்றி பகலவனை திடீரென மறைத்து விட்டான்.

பெரு மழை பெய்ய ஆரம்பித்துவிட்டது!! 

மின்னல் கீற்றுகள் வானை கிழித்துக் கொண்டிருந்தன!!!

இடியோசை காதால் கேட்க முடியாத அளவிற்கு இருந்தது.!!!

சூறாவளிக் காற்று சுழன்று அடித்தது

இறைவனை மனதில் எண்ணிக்கொண்டு, அங்கிருந்த ஒரு பாழடைந்த மண்டபத்தில், இயற்கைச் சீற்றங்களுக்கு அஞ்சி ஒதுங்கினேன்.

கூர்ந்து கவனித்தேன் அது பாழடைந்த மண்டபம் அல்ல. 

சிதிலமடைந்த கோவில்

என் மனதில் கோயிலில் பழுதடைந்த பகுதிகளை கட்டுமான பொருட்களை கொண்டு சீர் செய்வதாக நினைத்து பார்த்தேன். 

கோவிலின் முழுத் தோற்றமும் குறையின்றி கண்ணுக்கு புலப்பட்டது. 

என் எண்ணங்களாலேயே கோயிலுக்கு வண்ணமிட்டு, கர்ப்பகிரகத்தை பிரதிஷ்டை செய்து ,கோயிலின் பணிகள் அனைத்தையும் முடித்து, குடமுழுக்கும் நடத்தி வைப்பது போன்ற நினைத்து பார்த்தேன்.

சற்றே அயர்ந்து விட்டேன் இளவரசே !

இரவு பொழுது நீங்கி கதிரவன் உதித்து விட்டான்.

என் இல்லத்திற்கு செல்லாமல் ,என் மண நாளை தங்களிடம் குறித்துக்கொண்டு 

பின் இல்லம் செல்லலாம் என்று தங்களைக் காண வந்துவிட்டேன் இளவரசே!

இதனைக்கேட்ட சஹாதேவன், ஆனந்த அதிர்ச்சியுற்று பிரஜையின் மண நாளை குறித்துக் கொடுத்து, அவரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

அப்போது அங்கு புன்னகையுடன் வந்த பரமாத்மாவை வணங்கி!!

 வாசுதேவரே ! பரிகாரம் ஏதும் செய்யாமலே ,நேற்று நான் கூறிய பிரஜை வந்து மண நாள் குறித்து சென்றார்.

அது  எப்படி சாத்தியம் 

சாஸ்திரங்கள் பொய்த்தது இல்லையே? 

அப்புறம் எப்படி உயிரோடு உள்ளார் வாசுதேவரே?

சஹாதேவா அப்பிரஜை  நேற்று அவர் எங்கு இருந்தார்? 

என்ன செய்தார்?

சிதிலமடைந்த கோயிலில் அப்பிரஜை தங்கி, அதனை தன் நினைவாலேயே சீர் செய்து, குடமுழுக்கும் செய்திருக்கிறார் வாசு தேவரே !

சஹாதேவா கவனமாக கேள்!!! 

இறைவன் அவரின் அர்ப்பணிப்பை முழுமையாக ஏற்றுக் கொண்டார் ; 

எவ்விதத்திலும் இறைவனை வழிபடலாம் ;

இறைவனை பற்பல வழிகளில் பக்தர்கள் ஆராதிக்கின்றனர்; அனைவரிடமும் எவ்விதத்திலும் பாகுபாடு பாராட்டாதவர் இறைவன்.

செல்வ செழிப்பில் திளைப்பவர் முதல் ஆண்டி வரை அனைவரும் இறைவனுக்குச் சமமானவரே .

அவர் பக்தர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பாகுபடுத்திப் பார்ப்பதில்லை.

நேர்த்திக்கடன்கள் பல்லாயிரக்கணக்கான முறைகளில் இறைவனுக்கு செலுத்தப்படுகிறது. 

அனைத்தையும் ஒரே நேர்கோட்டில் வைத்து தான், அவரவர் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ரட்சிக்கிறான் இறைவன். 

அதன்படி அப்பிரஜையின் மனக் கோயிலை ஏற்று  அவரின் ஆயுளை நீட்டித்து, இருக்கிறார் இறைவன்.

உண்மைதான்  வாசுதேவரே! அனைவரும் இறைவனுக்கு சமம்.

ஆனால் அப்பிரஜை கூறிய சிதலமடைந்த கோயில் இங்கு இல்லையே?

உண்மைதான் சஹாதேவா! அப்பிரஜை ஒதுங்கிய இடத்தை சிதிலமடைந்த கோயிலாக மனதில் எண்ணி, தன் எண்ணத்தினால் சீர் செய்து, குடமுழுக்கும் நடத்தியிருக்கிறார் "**

அவர் நிறுவியது மனக்கோயில்.

இதனை இறைவன் முழுமையாக ஏற்றுக்கொண்டு அவரின் ஆயுளை நீட்டித்து விட்டார். 

பக்தர்கள் விரும்பும் வண்ணம் எவ்விதத்திலும் இறைவனை வழிபடலாம் சகாதேவா! 

மனதில் சிதிலமடைந்த கோவில் தோன்ற ,வாசுதேவர் தான் காரணமாக இருக்க முடியும் என, சஹாதேவன் நினைக்க 

வாசுதேவரோ! சகாதேவனை பார்த்து, வதனச்சிரிப்பு சிரிக்க, பரந்தாமனின் அருளை எண்ணி, பணிந்து வணங்கினான் சஹாதேவன்.

பரமாத்மா நினைத்தால் ஷண நேரத்தில் நம் வாழ்க்கையை மாற்றியமைக்க முடியும்.


ஜெய் ஸ்ரீராம்

No comments:

Post a Comment