லிங்கன் தன் மகனைப் பயிற்றுவிக்கும் ஆசிரியருக்கு எழுதிய நெகிழ்ச்சி தரும் கடிதம்...
அனைத்து மனிதர்களுமே நேர்மையானவர்களாக, உண்மையானவர்களாக இருக்கமாட்டார்கள் என அவனுக்குச் சொல்லித்தாருங்கள். ஆனால், பகைவர்களுக்கு நடுவில் அன்பான நட்புக்கரம் நீட்டும் மனிதர்களும் உண்டென அவனுக்கு தெரிவியுங்கள்.
பொறாமை அவன் மனதை அண்டாமல் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் பயந்து ஒடுங்கிப்போவது, கோழைத்தனம் என புரியவையுங்கள்.
புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்கு திறந்துகாட்டுங்கள். அதே வேளையில், இயற்கையின் ஈடில்லா அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குகற்றுக் கொடுங்கள்.
வானில் பறக்கும் பட்சிகளின் புதிர்மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் துரிதத்தையும், பசுமையான மலையடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க கற்றுத்தாருங்கள் அவனுக்கு.
ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
மற்றவர்கள் தவறு என விமர்சித்தாலும்கூட, சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
மென்மையான மனிதர்களிடம் மென்மையாகவும், முரட்டுக்குணம் கொண்டவர்களிடம் கடினமாகவும் அணுக அவனை தயார்படுத்துங்கள்
அனைத்து மனிதர்களின் குரலுக்கும் அவன் செவிசாய்க்க வேண்டும் என அறிவுறுத்துங்கள். எனினும், உண்மை எனும் திரையில் வடிகட்டி நல்லவற்றை மட்டும் பிரித்தெடுக்க அவனுக்கு கற்றுக்கொடுங்கள்.
துயரமான வேளைகளில் சிரிப்பது எப்படி என்று அவனுக்கு கற்றுக்கொடுங்கள். கண்ணீர் விடுவதில் தவறில்லை என்றும் அவனுக்கு புரியவையுங்கள்.
போலியான நடிப்பைக் கண்டால் எள்ளிநகையாடவும், வெற்று புகழுரைகளை கண்டால் எச்சரிக்கையாக இருக்கவும் அவனுக்கு பயிற்சி கொடுங்கள்.
அவனைக் கனிவாக நடத்துங்கள். அதிக செல்லம் கொடுத்து உங்களை சார்ந்திருக்க செய்ய வேண்டாம்.
சிறுமை கண்டால் கொதித்தெழும் துணிச்சலை அவனுக்கு ஊட்டுங்கள். அதேவேளையில் தனது வலிமையை மவுனமாக வெளிப்படுத்தும் பொறுமையையும் அவனுக்கு சொல்லி கொடுங்கள். இது ஒரு மிகப்பெரிய பட்டியல்தான்...
இதில் உங்களுக்கு சாத்தியமானதையெல்லாம் கற்றுக்கொடுங்கள். அவன் மிக நல்லவன். என் அன்பு மகன்.
No comments:
Post a Comment